நக்கீரன் கோபால் தம் தம்பிகளைக் காப்பாற்ற செய்த வரலாற்றுநிகழ்வு

நக்கீரன் பத்திரிகையின் மூத்த செய்தியாளர் சிவசுப்பிரமணியன் எழுதியிருக்கும்,நக்கீரன் நடத்திய தர்மயுத்தம் என்கிற நூலுக்கு சட்டப்போராளி ப.பா.மோகன் எழுதியுள்ள அடர்த்தியான முன்னுரை…..

“நக்கீரன் நடத்திய தர்மயுத்தம்.”

21.11.2001-மாலை ஐந்து மணி. அந்தியூர் பிரிவில் இருந்த எங்களுடைய (பழைய) அலுவலகத்தில் பணியில் மூழ்கியிருந்தேன். சென்னை நக்கீரன் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஆத்தூரிலிருக்கும் நக்கீரன் செய்தியாளர் சிவசுப்ரமணியம் கடத்தப்பட்டுள்ளார் என்ற செய்தியை ஆசிரியர் என்னிடம் சொன்னார்.

உலகெங்கிலும் உள்ள இடதுசாரி இயக்கத் தோழர்களின் போராட்ட வரலாறுகளில் இது போன்ற ஏராளமான கடத்தல் நிகழ்வுகளையும், சட்டத்துக்கு எதிரான சிறை வைப்பு நடவடிக்கைகளையும் நான் கண்டுள்ளேன். அதனால், தோழர் சிவாவின் கடத்தல் என்ற செய்தி எனக்குள் எவ்வித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.

மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வந்த வீரப்பனை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டியவர் நக்கீரன் செய்தியாளர் தோழர் சிவசுப்ரமணியம்.

யாரும் சந்திக்கவே முடியாத அடர்ந்த காடுகளுக்குள் வீரப்பன் வாழ்ந்து கொண்டுள்ளார், வீரப்பனுக்கு வெளியுலகில் தொடர்புகள் இல்லை. காடுகளில் உள்ள மலை குகைகளில், அவர் ஆதிவாசியை போல வாழ்கிறார். அதனால் தான் எங்களால் வீரப்பனை பிடிக்க முடியவில்லை என அதிரடிப்படையினர் அறிவித்து வந்த நேரத்தில், அதில் உண்மையில்லை. வீரப்பன் வெகு இயல்பாக, சராசரி மனிதனைப் போலவேதான் காடுகளில் வாழ்கிறார். அவருக்கு நாட்டு நடப்புகள் முழுமையாக தெரிகிறது என்பதை நிரூபிக்கும் வகையில், வீரப்பனின் காட்டு வாழ்கையில் உள்ள மறுபக்கத்தை வீடியோவில் பதிவு செய்து கொண்டுவந்து வெளி உலகத்துக்கு காட்டியவர் சிவசுப்ரமணியம்.

இந்த நேரத்தில், வீரப்பனுக்கு உதவுகிறார்கள் என்ற பெயரில் மலைப்பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடி மக்களுக்கு எதிராக சொல்லமுடியாத வன்முறைகளை சிறப்பு அதிரடிப்படையினர் நடத்தி வந்தனர். இந்த கட்டவிழ்த்து விடப்பட்ட வன்கொடுமைக்கு எதிராக நான் சார்ந்துள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பழங்குடி மக்கள் சங்கம் உள்ளிட்ட இயக்கங்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டு அம் மக்களின் நீதிக்காக போராடி வருபவர் நக்கீரன் கோபால்.

இந்த இரு நிகழ்வுகளில் பின்னணியில் தான் சிவசுப்ரமணியம் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என நான் முடிவு செய்தேன். கடத்தப்பட்டுள்ள சிவாவை பத்திரமாக மீட்பதற்கான வழிகளை பார்த்தேன்.

எதிரிக்கு கால ஆவகாசம் கொடுப்பது, அவர்களின் வெற்றிக்கு நாமே வழி ஏற்படுத்திக் கொடுப்பது போன்றதாகும். எனவே, சிவசுப்ரமணியம் கடத்தப்பட்ட நிகழ்வை உடனே காவல் நிலையத்திலும், நீதி மன்றத்திலும் பதிவு செய்வதுதான் அவரை நாம் உயிருடன் மீட்பதற்கான ஒரே வழி என்பதை அழுத்தம் திருத்தமாக ஆசிரியரிடம் கூறினேன்.

சென்னையில் இருக்கும் நக்கீரன் வழக்குரைஞர் பெருமாள் சார் மூலமாக அதற்கான வேலைகளை துவங்கியுள்ளதாக ஆசிரியர் சொன்னார். மேற்கொண்டு எந்த உதவியானாலும் என்னை கூப்பிடுமாறு ஆசிரியரிடம் கூறினேன்.

அரசும், காவல்துறையும் வெயிடும் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்த இதழ்களே உடகங்கள் என்றிருந்த நிலையை மாற்றி, அரசு மற்றும் ஆட்சியாளர்கள் இடையில் நடக்கும் மறைமுக பேரங்களையும், ஊழல்களையும் அம்பலப்படுத்தி வந்தது நக்கீரன்.

குறிப்பாக 1991-96, காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமயிலான அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து நக்கீரன். சொல்லப்போனால் தமிழகத்தில் எதிர்கட்சியாக இருந்து அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியது நக்கீரன். இதன் பயனாகவே, 2001-ஆம் ஆண்டு அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையிலேயே “நான் ஆட்சிக்கு வந்தால், நக்கீரன் மீது நடவடிக்கை எடுப்பேன்…” என்று ஜெயலிலிதா கூறும் அளவுக்கு நக்கீரன் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பெயராக இருந்தது.

இதன் பின்னணியில் தான் இந்த கடத்தல் நடந்துள்ளது, இது சிவசுப்ரமணியத்தை கடத்தியதுடன் நிற்காது, மேலும் தொடரும். நக்கீரன் கோபாலை குறிவைத்துதான் இந்த கடத்தல் நடந்துள்ளது என்பது எனக்குத் தெரிந்தது.

இதுகுறித்து நான் என்னுடைய ஜூனியர்களுடன் பேசிகொண்டிருக்கும் போது, நீதிமன்றத்தில் இருந்து வந்த எனது இலன் வழக்குரைஞர் சிவராமன் இன்று மாலை அந்தியூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், கந்தவேல் கொலை வழக்கில் எதோ ஒரு மெமோ பைல் செய்தார் என்று சொன்னார்.

எனக்கு சந்தேகப் பொறி தட்டியது. எனது இளம் வழக்குரைஞர்களுடன் பவானி நீதிமன்றம் சென்றேன். அந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஷாபாய் என்பவர் என்னுடைய கட்சிக்காரர். அந்த உரிமையில் கந்தவேல் கொலைவழக்கு தொடர்பான கட்டைத் தேடியெடுத்துப் பார்த்தேன்.

இந்த வழக்கில் முக்கியமான துப்பு ஓன்று கிடைத்துள்ளது. அதனால், வழக்கை மறு விசாரணை செய்யவேண்டும் என ஆய்வாளர் முருகேசன் மனு தாக்கல் செய்திருந்தார். இவர்களுக்கு புதிதாக என்ன துப்பு கிடைத்திருக்கும்.

இன்று காலை சேலம் மாவட்டம், ஆத்தூரில் கடத்தப்பட்டுள்ள சிவசுப்ரமணியம் தான் துப்பு. தோழர். சிவா இப்போது அதிரடிப்படையின் கட்டுப்பாடுக்குள் வந்து விட்டார். இவரை வைத்து நக்கீரன் கோபாலையும் குற்றவாளியாக மற்றும், அவரையும் சட்டத்தின் பிடிக்கு கொண்டு வருவார்கள் என்று கணக்கிட்டேன்.

அடுத்தடுத்த நிகழ்வுகள் நான் நினைத்தது போலவே நடந்தது, கந்தவேல் கொலை வழக்கு மறு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. தாளவாடி பாஷாபாயின் மகன் அக்பர் காணாமல் போனார். நான்கு நாளுக்கு பின்னர் பவானி குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார். இவரிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 164-வது பிரிவின் கீழ் வாக்குமூலம் பெறவேண்டும் என போலீசார் மனுச் செய்கிறார்கள்.

இது நடந்து கொண்டிருக்கும் போதே, தாளவாடி பசவண்ணா என்பவர் காணாமல் போகிறார். நான்கு நாளுக்கு பின்னர் பவானி நீதிமன்றம் கொண்டு வரப்பட்ட பசவண்ணா, காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு ஈரோடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

அக்பரையும், பசவண்ணாவையும், அவரது குடும்பத்தினருடன் சென்று சந்திக்கின்றோம். கந்தவேல் கொலை செய்யப்பட்டதில், நக்கீரன் கோபாலுக்கும் தொடர்புள்ளது என்பது போன்ற ஒரு பொய்யான கதையை சொல்லி அந்த கதையை அப்டியே நீதி மன்றத்தில் சொல்லவேண்டும் என போலீசார் அடித்து, உதைத்துள்ளனர்.

அப்படி சொல்லாமல் போனால், உன்னை சுட்டுக்கொல்லவும் தயங்கமாட்டோம் என போலீசார் மிரட்டுகிறார்கள் என்பது தெரிகிறது. இதுகுறித்து உயர் நீதி மன்றத்தில் முறையிடுகிறோம்.

நெயதாலபுரம் அருகிலுள்ள இக்லூரை சேர்ந்த மாதேவா என்பவர் காணாமல் போகிறார். பாஷாபாயின் மருமகன் ஷபியுல்லா, தம்பி கலிமுல்லா என ஒவ்வொருவராக கர்நாடக போலீசாரால் கடத்தப்படுகிறார்கள்.

நெடிய சித்தரவதைகளுக்கு பின்னர் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். நக்கீரன் கோபாலுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் உங்களை இந்த வழக்கில் சாட்சியாக போட்டுவிட்டு, இத்தோடு விட்டுவிடுகிறோம். இல்லையானால் உங்களையும் குற்றவாளிகளாக சேர்ப்போம் என்று போலீசார் அவர்களை மிரட்டுகிறார்கள் என்பது தெரிகிறது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சத்தியமங்கலம் தோழர் மோகன்குமார் மற்றும் நடராசன் போன்றவர்கள் மூலம் தாளவாடியில் இருந்து கடத்தப்படும் ஆட்களை கண்டுபிடித்து, அவர்களை காப்பாற்றும் பணியை செய்து வந்தோம். சத்தியமங்கலம், கோபி, பங்களாபுதூர், தாளவாடி, அந்தியூர், கோவை, வெள்ளித்திருப்பூர், கொளத்தூர் என வீரப்பன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ள காவல் நிலையங்களில் போலீசார் என்னென்ன நடவடிக்கைகளை துவங்கியுள்ளனர் என்பதை தொடர்ந்து கண்காணித்தோம்.

நீதி, நிர்வாகம், காவல் என முக்கியமான பொறுப்புகளை வைத்துள்ள அரசின் செயல்களை நம்மால் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் தடுக்கமுடியும். எங்களின் கண்காணிப்பையும் மீறி புதுபீர்க்கடவு இராஜேந்திரன், கோவை வெற்றிவேல், சிக்கரசம்பாளையம் பெரிய பொன்னான் போன்றவர்கள் போலீசாரால் கடத்தப்பட்டு போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து 164-வது பிரிவின் கீழ் வாக்குமூலம் கொடுத்ததாக கூறி கையெழுத்து போட்டனர்.

இதைத் தொடர்ந்து கந்தவேல் கொலை வழக்கில் ஆசிரியருக்கு முன்ஜாமீன் வாங்கினோம். எதிர்பாராத நேரத்தில், நக்கீரன் செய்தியாளர்கள் ஜீவா தங்கவேல், சுப்பு, பாலு என மூவர் மீதும் அந்த வழக்கு பாய்ந்தது. இருவருக்கு மட்டும் ஈரோடு கோர்டில் முன்ஜாமீன் வாங்கினோம். சுப்பு தலைமறைவு வாழ்கைக்கு சென்றார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அவர் அதே நிலையில் இருந்தார்.

தொடர்ந்து, ராஜ்குமார் கடத்தல் வழக்கு, பக்தவச்சலம் கொலை வழக்கு என ஒவ்வொரு வழக்கிலும், ஆசிரியருக்கு முன்ஜாமீன் பெற்றுவிட்ட நிலையில், செய்தியாளர் சுப்புவின் அக்கா வீட்டுக்காரர் முருகேசன் என்பவரை, வீரப்பனின் சொந்த ஊரான செங்கப்படியில் இருந்து தமிழக அதிரடிப்படையினர் கடத்திக் கொண்டுவந்து அவரை அடித்து, உதைத்து, பயமுறுத்தி வாக்குமூலம் வாங்கும் முயற்சியில் இறங்கினர்.

நீதிமன்ற உதவியுடன் அந்த முயற்சியை முறியடித்தோம். அதிரடிப்படையால் தாக்கப்பட்ட முருகேசன் இரண்டு வாரகாலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னரே வீட்டுக்கு போகமுடிந்தது. இதன் பிறகுதான் தமிழக போலீசார் தங்களின் ஆள் கடத்தும் முயற்சியை கை விட்டனர்.

எதிர்பாராத நேரத்தில், மூலக்காடு சம்பத் என்பவர் கர்நாடக போலீசாரால் கடத்தப்படுகிறார். அவரை வைத்துக்கொண்டு என்ன செய்கிறார்கள் என்பதைப்பற்றி விசாரித்தபோது, இராமாபுரம் காவல் நிலைய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பத்தை விசாரித்ததில், நக்கீரன் கோபாலுக்கும், வீரப்பனுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்று அவர் பெயரால் ஒரு வாக்கு மூலத்தை தமிழக போலீசாரே தாயரித்து, அதை கர்நாடக போலீசாரிடம் கொடுத்து, அதை அடிப்படையாக கொண்டே ஆசிரியரை “பொடா” சட்டத்தில் கைது செய்தனர்.

சிறைக்குள் இருக்கும் தோழர் சிவசுப்ரமணியை சிறையிலிருந்து மீட்கும் முயற்சியின் போதுதான், வெளியிலும் இத்தனை போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தது. இதையெல்லாம் பற்றி எழுதினால், இதுபோலவே இன்னும் பல நூல்கள் எழுதலாம்.

ஒரு வழக்குரைஞராக எனது வாழ்க்கையில், நக்கீரன் கோபால் அவர் தம் உற்ற தம்பிகளான சிவசுப்ரமணியம், ஜீவாதங்கவேல், சுப்பு மற்றும் மகரன் ஆகியோருக்காக நாங்கள் நடத்திய சட்டப்போராட்டம் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வுகளாகும்.

சிவாவின் துணிச்சல், சிறை வாழ்வு, அடக்குமுறைக்கு எதிரான சட்டப் போராட்டம் போன்றவை நாளைய இதழியல்துறை மாணவர்கள் பாடமாக படிக்கவேண்டிய ஒன்று.

நக்கீரன் கோபால் மற்றும் சிவசுப்ரமணியாம் மீதான வழக்குகள் நீதித்துறை வரலாற்றில் முத்திரை பதித்த வழக்குகளாகும்.

நடந்த உண்மைச் சம்பவங்களை சிவாவின் வார்த்தைகளிலேயே பாடம் படிப்பது, பார்ப்பது, கேட்பது போல சுவை குன்றாத நாவவலுக்கு ஒப்பான சுவையுடன் பொய் வழக்கும் போராட்டமும் எனும் நூலை எழுதியுள்ளார்.

இந்நூல் அரசின் அடக்குமுறை, ஆதிக்கத்தை எதிர்த்து சமர் புரிந்த ஒரு வீரனின் வரலாறு ஆகும்.

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப்படை போலீசாரின் அத்து மீறிய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என கூறிய சதாசிவா ஆனணயத்தின் அறிக்கையே நக்கீரன் நடத்திய தர்மயூத்தத்தின் முதல் வெற்றியாகும்.

நக்கீரனின் சமுதாயப்பணி தொடர வாழ்த்துகிறேன்.

Leave a Response