தேர்தலில் வெல்ல பாஜக வின் பகீர் திட்டங்கள் இவைதான் – ராஜ்தாக்கரே பரபரப்பு

நான் மோடியை தொலைநோக்குப் பார்வை கொண்டவராக முன்பு நினைத்தேன். ஆனால் இப்போது அவர், நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் ஒரு ஈவண்ட் மேனேஜராகவே தெரிகிறார்’ என்கிறார் சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே.

அவர் பிரதமர் மோடி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ‘பாஜக தகிடுதத்தங்கள்’ என்று நடப்பு மத்திய அரசின் ஆட்சியை வர்ணித்த ராஜ்தாக்கரே மேலும் கூறியிருப்பதாவது;-

பிரதமர் மோடி தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக தகிடுதத்தங்களைச் செய்து வருகிறார். அவர் ஜப்பான் பிரதமரை அழைத்து குஜராத்தில் புல்லட் ரயில் திட்டத்தைத் தொடங்குகிறார். குஜராத் தேர்தல்களுக்காகவே இதனைச் செய்தார்.

எனக்குக் கிடைத்த தகவலின்படி தாவூத் இப்ராஹிம் இந்தியா வருவதற்கான ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளார்.இப்போது மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மிகப்பெரிய திட்டம் ஒன்றின் ஒரு அங்கம்தான் தாவூத். பாகிஸ்தானுக்கு எதிராக போர் செய்யக் கூட தயங்கமாட்டார்கள். அல்லது மதக்கலவரங்களைக் கூட தூண்டலாம்.

தேர்தல்களில் வெற்றி பெற அவர்கள் கையில் வேறு உபாயங்கள் என்ன இருக்கிறது? இந்திய மக்கள் பல முறை உணர்ச்சிப்பூர்வமான விவகாரங்களை முன்வைத்து வாக்களித்துள்ளனர். டோக்லாமில் என்ன நடந்தது? அதன் விளைவுகள் என்ன? ஏன் அது அவ்வாறு நடந்தது என்று யாருக்காவது தெரியுமா? இதில் கவனத்தைத் திசைத்திருப்பி இன்னொரு புறம் நினைத்ததைச் செய்து கொள்ளலாம். ஊடகங்களும் இதில் சுறுசுறுப்பாக உள்ளன. பாஜகவுக்கு வாக்கு வங்கியை அதிகரிக்க இதைத்தவிர வேறு வழி ஏதாவது இருக்கிறதா? ஒன்றுமேயில்லை.

நான் மோடியை தொலைநோக்குப் பார்வை கொண்டவராக முன்பு நினைத்தேன்.ஆனால் இப்போது அவர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் ஒரு ஈவண்ட் மேனேஜராகவே தெரிகிறார். யோகாவாகட்டும், தூய்மை இந்தியாவாகட்டும், மேக் இன் இந்தியாவாகட்டும். அரசு என்பது நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நிர்வகிக்கும் ஒரு நிறுவனமாகவே செயல்படுகிறது.

பாஜக, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார். ஆனால் அதன் பிறகு அவர் நேர் எதிராகச் செயல்பட்டார். பிரதமர் ஆவதற்கு முன்பாக ஜிஎஸ்டியை எதிர்த்தார். ஆதாரை எதிர்த்தார். ஆனால் தற்போது ஜிஎஸ்டி, ஆதாரை திணித்துள்ளார்.

கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியனின் பாக்கெட்டிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்று கூறியது தேர்தலுக்காகக் கூறப்பட்ட ஒன்று. பதவியைப் பிடிக்க மோடி வாக்காளர்களிடம் பொய்களைக் கூறியுள்ளார் என்று ஒவ்வொருவரும் உணரும்படியாகவே உள்ளது.

ஆனால் இப்போது இதனை வெட்கமில்லாமல் ஒப்புக் கொள்கின்றனர். பணமதிப்பு நீக்கம் கறுப்புப் பணத்தை ஒழிக்கத்தான் என்று கூறப்பட்டது, ஆனால் 99ரூ பணம் வங்கிக்கு வந்து விட்டது. எங்கே கறுப்புப் பணம்? ஊழலும் பயங்கரவாதமும் நின்று விட்டதா? எந்த கறுப்புப் பண பதுக்கல்காரர் சிறைக்குச் சென்றார்? பாஜக ஊழலுக்கு எதிரானது என்றால், தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர்கள் செலவிட்ட பணம் எங்கிருந்து வந்தது? பாஜகவினர் சிலர் பணத்துடன் கைது செய்யப்பட்டனர். ஆனால் அது பற்றிய செய்திகள் மறைக்கப்பட்டன. விஷயம் என்னவெனில் இவர்கள் உண்மையான முகம் தெரியவர காலம் பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார். நன்றி-தீக்கதிர்

Leave a Response