யாழ்ப்பாணத்தில் இன்றுமுதல் பிளாஸ்டிக் தடை கடுமையாக அமல் – சூழல் அமைச்சர் அறிவிப்பு

எமது ஆரோக்கியத்தைப் பேணும் பொருட்டும் அடுத்துவரும் தலைமுறைகளுக்கு மாசற்ற ஆரோக்கியமான பூமியைக் கையளிக்கும் பொருட்டும் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்கப் பூமி தினமான இன்று (22.04.207) அனைவரும் சபதம் ஏற்போம் என்று யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிளாஸ்டிக் பைகளின் தடை தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

பூமியில் குவிந்துவரும் கழிவுகளில் மிகப்பெரும் பங்கு பிளாஸ்டிக் கழிவுகளாகவே உள்ளன. மண்ணில் மக்கிப்போகாத இவை மனித ஆரோக்கியத்துக்கும் இயற்கைச் சூழலுக்கும் மீண்டும் சீர்செய்ய முடியாத அளவுக்கு மிகப்பெரும் கேடுகளை விளைவித்து வருகின்றன.

பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்பட்டுவரும் பாதகங்களைக் கருத்திற்கொண்டு இலங்கையில் 2007ஆம் ஆண்டு முதல் தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் 20 மைக்ரோன்கள் அல்லது அதற்குக் குறைவான தடிப்புக் கொண்ட பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் 10,000 ரூபாய் தண்டப்பணம் அல்லது 2 வருடங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளையும் சேர்த்து அனுபவிக்க நேரிடும்.

எனினும், இத்தடை வடக்கு மாகாணத்தில் பூரணமாக நடைமுறைக்கு வரவில்லை. இதனால், வடக்கு மாகாணசபையின் 10.01.2017ஆம் திகதி நடைபெற்ற 82ஆவது அமர்வின்போது 20 மைக்ரோன்கள் அல்லது அதற்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளின் உற்பத்திக்கும் விற்பனைக்கும் பயன்பாட்டுக்கும் விதிக்கப்பட்ட தடை பூமி தினமான ஏப்ரல் 22 ஆம் திகதியில் இருந்து வடக்கு மாகாணத்தில் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்தோடு அன்றைய தினத்தில் இருந்து வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளும், மருத்துவமனைகளும், அரசு அலுவலகங்களும், பூங்காக்களும், சுற்றுலா மையங்களும் எல்லா வகையான பிளாஸ்டிக் பைகளையும் ஒருநாள் பாவனைக்குரிய பிளாஸ்டிக் குவளைகள், உணவுப் பெட்டிகள், தட்டுகள் போன்றவற்றையும் பயன்படுத்துவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத வடக்கு மாகாணத்தை உருவாக்குவதற்கு சட்டங்களும் தீர்மானங்களும் மாத்திரம் போதுமானதல்ல. பொதுமக்கள் அனைவரினதும் உளப்பூர்வமான பங்களிப்பே மிக இன்றியமையாததாகும். அந்தவகையில், எமது ஆரோக்கியத்தைப் பேணும் பொருட்டும் அடுத்துவரும் தலைமுறைகளுக்கு மாசற்ற ஆரோக்கியமான பூமியைக் கையளிக்கும் பொருட்டும் பூமி தினமான இன்றிலிருந்து எல்லா வகையான பிளாஸ்டிக் பைகளையும் ஒருநாள் பாவனைக்குரிய பிளாஸ்டிக்கினால் ஆன குவளைகள், போசன விரிப்புகள், உணவுத் தட்டுகள், உணவுப் பெட்டிகள் ஆகியவற்றையும் பயன்படுத்தவும் கொள்வனவு செய்யவும் மாட்டோம்” என்று நாம் அனைவரும் சபதம் ஏற்போம்.

பிளாஸ்டிக் பைகளுக்குப் பழக்கப்பட்ட எமது கைகளுக்கு அவற்றைக் கைவிடுவது என்பது கடினமானதொன்றாகவே இருக்கும். எனினும் நாம் அனைவரும் இவற்றைக் கைவிடாவிடின் இயற்கை எம்மை விரைவிலேயே கைவிட்டுவிடும் இக்கட்டான சூழ்நிலையிலேயே நாம் இன்று உள்ளோம்.

தேவைகளே கண்டுபிடிப்புகளின் தாய். அந்தவகையில் நாம் கைவிடும் இந்தப் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று சற்றுத் தாமதமானாலும் பயன்பாட்டுக்கு வந்தே தீரும். அதுவரை பெரும் நன்மைகளுக்காகச் சிறுசிறு சிரமங்களைப் பொறுத்துக் கொள்வோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response