விழுப்புரம்,செப்.17 (டி.என்.எஸ்) தமிழகத்தில் இனி ஜெயலலிதாவல் முதல்வராக வர முடியாது, என்று திமுகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைதலைவர் மஸ்தான் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பொன்முடி வரவேற்று பேசினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியாவது:
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு அதிக இடங்களை வெற்றி பெற்றதாக கூறுகின்றனர் ஆனால் அந்த தேர்தலில் அ.தி.மு.க. தேர்தல் கமிஷனோடு கூட்டணி வைத்துதான் அதிக இடங்களை வென்றுள்ளது.
இந்தியாவில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போன மாநிலத்தில் முதல் இடத்தில் இருப்பது உத்தரபிரதேசம். அடுத்ததுதான் தமிழகம். ஆனால் உத்தரபிரதேசத்தில் கூட 144 தடையுத்தரவு போடப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் போடப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றாலும் தற்போது ஜெயலலிதா நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதில் ஓ.பன்னீர்செல்வம் தற்போது முதல்வராகியுள்ளார். அவர் முதல்வர் அறைக்கு சென்று பணியாற்றவில்லை. அவர் அறையின் வாயிலிலும் நிதி அமைச்சர் என்றுதான் உள்ளது. எனவேதான் தமிழகத்தை யார் ஆட்சி செய்வது? என்றும், அவரை பொம்மை முதல்வர் என்றும் கூறியுள்ளேன்.
அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் படும் வேதனைகளை சொல்ல முடியாது. கடந்த தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுயஉதவி குழுவுக்கு கடன், வேலைவாய்ப்பு என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இன்று வங்கிக்கு சென்று கடன் கேட்டாலே மகளிர் வெளியேற்றப்படுகின்றனர். இந்த ஆட்சியில் முதியோர் உதவித்தொகையும் வழங்கப்படவில்லை.
இப்படி மக்கள் தினம் தினம் படும் வேதனை கொஞ்சமல்ல. தமிழ்நாட்டில் இனி ஜெயலலிதா முதல்வராக வர முடியாது. இது மக்கள் மன்றம் விதித்த தீர்ப்பு அல்ல. நீதிமன்றம் விதித்த தீர்ப்பு.
வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் கருணாநிதி முதல்வர் ஆவது உறுதி. இதை தி.மு.க. பதவிபெற வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. இந்த ஆட்சியில் தமிழக மக்கள் இன்னல்களில் சிக்கி தவிக்கிறார்கள். அதில் இருந்து காப்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கூறுகிறேன். மேலும் 2016–ல் கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைக்க ஒவ்வொரு தொண்டனும் சபதம் ஏற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.


