
ஒன்றிய வருவாய் குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை திருச்சி மண்டல அதிகாரிகளுக்கு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு சர்வதேச போதைப்பொருளான மெத்தபெட்டமைன் கடத்துவதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வந்ததாம்.
இதையடுத்து கடந்த 16 ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தை சேர்ந்த சுகன் வீட்டில் 16 பேர்கொண்ட புலனாய்வுதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைத்திருந்த, சர்வதேச சந்தை மதிப்பில் ரூ.135 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்த பெட்டமைன் பறிமுதல் செய்தனர்.
இந்தக் கடத்தலுக்கு மூளையாக இருந்த நாகப்பட்டினம் மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான வேளாங்கண்ணி அருகே கீழப்பிடாகையை சேர்ந்த பூபாலன்(42), மணிகண்டன்(29), பிரதாபராமபுரம் சதீஷ்(30) ஆகிய 4 பேரை கைது செய்து வேதாரண்யம் மாஜிஸ்திரேட் முன்பு நேர்நிறுத்தி, நள்ளிரவில் நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
35 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அக்டோபர் 17 தொடங்கி இந்தச் செய்திகள் பெரிய அளவில் வெளியாகத் தொடங்கியதும்,இதை மடைமாற்ற,அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த திமுக கூட்டத்தின் காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.அதில்,திமுகவைச் சேர்ந்த பெண்பேச்சாளர்,முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசியிருக்கிறார்.
அதை வெளியிட்டு கண்டனம் தெரிவித்ததோடு அவர் மீது வழக்கும் பதியப்பட்டிருக்கிறது.அந்தக் காணொலியை வெளியிட்டதும் ஓர் அமைச்சர்தான்.அதன்பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நீண்ட அறிக்கை வெளியிட்டிருப்பது இன்னொரு அமைச்சர்.
இதனால்,தவெக மீதான போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து தப்பவே பத்துநாட்களுக்கு முன்பு நடந்த பழைய காணொலியைப் பகிர்ந்து அதைப் பெரிய சிக்கல்போல் காட்ட முற்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
யாருக்குமே தெரியாத ஒரு கூட்டத்தின் காணொலியை நமது அமைச்சர்களே வெளியிட்டு முதல்வரை அசிங்கப்படுத்திவிட்டார்கள்.இது நல்லதல்ல என்று தவெகவினர் சிலரே பொதுவெளிகளில் விமர்சனம் செய்துவருகிறார்கள்.
– இராசன்


