
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:-
நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் பார்க்காத தோல்வியும் இல்லை. தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை. திமுகவின் எதிர்காலத்தை திட்டமிட நமக்கு கால அவகாசம் கிடைத்திருப்பதாக எடுத்துக் கொள்வோம்.
திமுக வரலாற்றில் இது மிக முக்கியமான செயற்குழு. உங்களின் ஒப்புதலுடன் திமுகவின் அமைப்பு முறையில் முக்கியமான பெரிய மாறுதல்களைச் செய்யவிருக்கிறோம்.
திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் கடந்த பிறகும், கழகம் வலிமையோட இருப்பதற்கான காரணம் நம் அமைப்புமுறை தான்.
தலைவர் கலைஞரின் வரிகளை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். “இந்த கருணாநிதியின் வாழ்வு முடிந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாழ்வு முடியாது! அதனை,அதன் அமைப்புமுறை காப்பாற்றும்!” இதுதான் அவர் குறிப்பிட்டது. அப்படிப்பட்ட அந்த அமைப்பு முறையின் வலிமையால்தான் நாம் நிற்கிறோம்.
நாம் தோல்வியடைய பல காரணங்கள் இருப்பினும் நிர்வாகிகளின் செயல்பாடுகளும் ஒன்று. அதையும் நாம் மறைக்கத் தேவையில்லை.நம் தவறுகளை முதலில் நாம் ஒப்புக் கொள்ளவேண்டும். வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவேண்டும்.எந்தத் தனிமனிதரின் தவறாக இருந்தாலும் – அதனால் பாதிக்கப்படுவது எழுபத்தைந்தாண்டு காலக் கழகம்.
தோல்விக்குப் பிறகு, எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகிறது.ஒவ்வொரு தொகுதியாகப் பார்த்து குறைகளைக் கண்டறிந்து ஆளை மாற்றுவதைவிட முழுமையான ஒரு சுயபரிசோதனை வேண்டும் என முடிவெடுத்தேன்.அந்தவகையில் திமுகவின் நிர்வாக அமைப்பில் பல மாறுதல்களைச் செய்யவிருக்கிறோம். கடுமையானதாகத்தான் இருக்கும்; சிலருக்கு கசப்பானதாகவும் இருக்கும். கசப்புதான் உடலுக்கு நன்மை செய்யும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த மாறுதல்கள் அடுத்த நூறாண்டுக்கு திமுக உயிர்ப்போடு இருப்பதை உறுதி செய்யும்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு, 38 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவை அமைத்தேன்.தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் கருத்துக்களைக் கேட்டு அதை அறிக்கையாக கொடுத்திருக்கிறார்கள்.அது தவிர,தனியாக இணையதளம் உருவாக்கப்பட்டு அதன் மூலமும் பல்லாயிரக்கணக்கான கருத்துகள் பெறப்பட்டு, அவை அனைத்தையும் தொகுத்து நான் முழுமையாக வாசித்து உள் வாங்கியிருக்கிறேன்.ஊருக்கே வெளிச்சம் கொடுக்கும் விளக்குக்கு, தனக்கு கீழே இருக்கும் இருட்டு தெரியாது.அப்படித்தான் நம்மிடம் இருந்த தவறுகளைக்
கண்டறியத் தவறிவிட்டோம்.
இந்தக் கருத்துகளின் அடிப்படையில – திட்டங்களை வகுக்க, தங்கம் தென்னரசு தலைமையில, மறுசீரமைப்புக் குழுவை அமைத்தேன்.
அந்தக்குழு அறிவாலயத்தில் பலநாள் கூடி, ஒவ்வொரு பிரச்சினையாக ஆய்வு செய்து,இடைக்கால அறிக்கையை என்னிடம் கொடுத்தார்கள்.முக்கியமான தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து தீர்மானமாக உருவாக்கியுள்ளோம்.
இளைஞர்கள், பெண்கள் நம்பிக்கையை மீண்டும் நமக்கு பெற்றுத் தருவது போல நம் நடவடிக்கைகள் அமையவேண்டும்.இனி வரும் நிர்வாகிகளுக்கு,அந்தந்த பொறுப்புகளுக்கு ஏற்ப வயது வரம்பையும், பதவிக்காலத்தையும் அறிமுகப்படுத்தப் போகிறோம்.புதுமுகங்களுக்கு அதிக எண்ணிக்கையில் பொறுப்புகளை வழங்கப் போகிறோம்.
விரைவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை நாம் தொடங்கவேண்டும்.உறுப்பினர் சேர்க்கை நேர்மையானதாக – உண்மையானதாக அமையவேண்டும்.உறுப்பினர் சேர்க்கைக்குப் பிறகு அனைத்து மட்டத்திலும் உட்கட்சித் தேர்தலை முறையாக நடத்துவோம்.தகுதி வாய்ந்த புதியநிர்வாகிகள் வெற்றி பெற்று வருவார்கள்.
நியமனங்களாக இல்லாமல் தேர்தல் மூலமாக வெல்பவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.கட்சியை மறுசீரமைப்பு செய்வதன் மூலமாக மட்டும்தான்,நாம் மீண்டும் அரசியல் வெற்றியைப் பெறமுடியும். எவ்வளவு விரைவாக முடியுமோ,அவ்வளவு விரைவாக கட்சி சீரமைப்புகளைச் செய்யவேண்டும். அதற்கு முதலில் நமக்கு மனமாற்றம் வரவேண்டியது அவசியம்.மாறுதலுக்குத் தயார் ஆகாமல் வெற்றி பெற முடியாது.என்னுடைய வருத்தமெல்லாம், கொள்கை – கோட்பாட்டில், உழைப்பில் – உறுதியில், போராட்டக் குணத்தில் வலிமையாக இருக்கிறவர்கள் கூட நிர்வாகிகளை அரவணைப்பதில் சறுக்கிவிடுகிறார்கள்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிக்காரர்களைப் பாத்தால் மலரும் முகம், நம் கட்சிக்காரர்களைப் பார்த்தால் மலர்வது இல்லை. எதிர்க்கட்சிக்காரர்களைப் பார்த்தால் வணங்கும் கை, நம் கட்சிக்காரர்களைப் பார்த்தால் வணங்குவது இல்லை.
தனக்கு இணையாக யாரும் வளரக்கூடாது என நினைத்தால் அந்த மாவட்டத்தில அவர்கள் மட்டும்தான் இருப்பார்கள்.ஒரு மாவட்டச் செயலாளரை மட்டும் வைத்து அந்த மாவட்டத்தில் கட்சியை வளர்த்துவிட முடியாது. ஒரு எம்எல்ஏ மட்டுமே வலிமையாக இருந்தால் அந்தத் தொகுதியில் வென்றுவிட முடியாது.
ஒவ்வொரு தொண்டனும் ஒரு நிர்வாகியாகச் செயல்படும் போதுதான் இயக்கம் வளரும்; இயக்கம் வாழும்! படைக்கு இளையோர் வரும்போது,அவர்களை மூத்தோர் வரவேற்று வழி நடத்துவதுதான் வலுவான படைக்கு அடையாளம்.
இப்போது ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்? மக்களுக்காக உழைக்காமல் – போராட்டம் நடத்தாமல் – கொள்கை இல்லாமல் – நிர்வாகக் கட்டமைப்பு இல்லாமல் – ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.இதைப் பார்த்து நாமும் அப்படி ஆக முடியாது – ஆகிடவும் கூடாது! அதுபோன்று நாமும் கட்சியை நடத்தலாம் என்று நினைக்கவே கூடாது.
நாம் நிரந்தரம்! நாம் போரடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்கள் இல்லை – போராட வந்தவர்கள்! வெற்றி தோல்வியில் நம் இயக்கத்தின் வாழ்க்கை அடங்கி இருக்கப் போவது இல்லை.ஒரு தேர்தலில் தோற்றால் அடுத்த தேர்தல் வரும்வரை தூங்கி வழிவதுதான் மற்ற கட்சிகளின் வழக்கம்.
எதிர்கட்சியாக இருந்தாலும் சுணங்கிடாமல்,மக்கள் நலனுக்காக சிறப்பாகச் செயல்படும் கட்சி திமுக என நம் எதிரிகளே சொல்வார்கள்.கம்பேக் கொடுப்பதில் நாம் ஸ்பெசலிஸ்ட். சிறப்பாகக் கொடுப்போம்!கடந்த முறை வென்ற பிறகு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து நல்லாட்சி கொடுப்போம் எனச் சொன்னோம்; அதைச் செய்தும் காட்டினோம். இப்போது தோற்றபிறகும் நான் சொல்கிறேன், நமக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் போராடப் போகிறோம். அவர்களின் நலனுக்கும் துணைநிற்கப் போகிறோம்.
நம் கட்சிக்காரர்கள் முதலில் அவர்கள் வீட்டில் அரசியல் பேசவேண்டும்.நம் பிள்ளைகள், நம் உறவினர்களிடம் முதலில் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.நம் உறவினர்கள்,அக்கம்பக்கத்தினர் வாக்குகளை முழுமையாக வாங்கவேண்டும்.
இப்போதைய முதல்வர் நாம் கொண்டு வந்த எல்லாத் திட்டங்களுக்கும் பெயர் மாற்றுவதில் பிசியாக இருக்கிறார். சட்டப்பேரவையை சினிமா செட் என நினைத்து பஞ்ச்டயலாக் பேசிக் கொண்டிருக்கிறார். நம்மைப் பொறுத்தவரை வெற்றியோ தோல்வியோ, மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்தவர்கள் நாம்.
இனமும் – மொழியும் – நாடும் இருக்கும் வரை கருப்பு சிவப்புக் கொடி பறக்கவேண்டும் என்ற நினைப்புடன் நாம் உழைக்கவேண்டும்.அப்படி,உழைக்கத் தேவையான உடன்பிறப்புகளை திமுகவில் அதிகம் சேர்க்கவேண்டும். எல்லாரும் சேர்ந்து உழைப்போம்!
பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கத்தை – தமிழினத் தலைவர் கலைஞர் வளர்த்த இயக்கத்தை இன்னும் வலிமை கொண்டதாக வளர்த்தெடுப்போம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இந்த உரை உட்பட அண்மைக்காலமாக திமுக தலைவரின் உரையில் ஆங்கிலக் கலப்பு கவனிக்கத்தக்க அளவில் இருக்கிறது.
இதையொட்டி,தற்போதைய தற்குறி நாரோடு சேர்ந்து இந்தப் பூவும் நாறவேண்டுமா? என்கிற விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.


