
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’
திட்டத்தை முதல்வர் விஜய் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த ஜூன் 22 ஆம் தேதி முதல் பிறக்கும் ஒவ்வொரு
குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களுக்கு 1,28,499 மோதிரங்கள் கொள்முதல்
செய்யப்பட உள்ளன. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தால் (TNMSC) கடந்த ஜூலை 14 ஆம் தேதி
இத்திட்டத்துக்கான டெண்டர் கோரப்பட்டது.
இதில் 11 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.தங்கம் விலையைத் தவிர்த்து, ஒரு மோதிரத்துக்கான செய்கூலி, சேதாரம், காப்பீடு, பேக்கிங் மற்றும் பிஐஎஸ் தரமுத்திரை உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் நிறுவனங்கள் விலையாகக் குறிப்பிட வேண்டும் என்பது டெண்டர் நிபந்தனை ஆகும்.
அதன்படி வெறும் ஒரு பைசா என்ற மிகக்குறைந்த விலைப்புள்ளியில் தங்கமோதிரம் செய்து தருவதாக குறிப்பிட்ட ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு 70 சதவீதம்,அதே விலைக்கு செய்துதர சம்மதித்த கல்யாண் ஜுவல்லர்ஸ்
நிறுவனத்துக்கு 30 சதவீதம் என மோதிரங்கள் தயாரிக்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய சந்தை சூழலில் வெறும் ஒரு பைசா செலவில் தங்கமோதிரத்தை வடிவமைத்துக் கொடுப்பது
சாத்தியமா? சாதாரணமாக ஒரு கிராம் தங்கம் வாங்கும்போதே செய்கூலி, சேதாரம் என கணிசமான தொகை வசூலிப்பார்கள். அரசு விதிமுறையின்படி, ஒரு மோதிரத்துக்கு பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரைக்கு மட்டுமே
குறைந்தபட்சம் ரூ.45 செலவாகும்.அதுதவிர,பேக்கிங்,போக்குவரத்து செலவு,காப்பீடு போன்ற செலவுகளையும்
வெறும் ஒரு பைசாவில் எப்படி ஈடுகட்ட முடியும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. பொதுவாக ஒரு கிராம் தங்க மோதிரம் தயாரிப்பதற்கான செய்கூலி,சேதாரம் ரூ.1,050 வரை வரும்.இவ்வளவு நட்டத்தை ஏற்றுக்கொண்டு தங்கமோதிரம் செய்து தர அந்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்டதன் பின்னணியில் என்ன இருக்கிறது? என்கிற கேள்வி பெரிதாக எழுந்துள்ளது.
அதோடு,தமிழ்நாடு அரசின் தங்க மோதிரம் திட்டத்தின் ஒப்பந்தப்புள்ளியில் தங்கம் தவிர்த்து இதர செலவுகளுக்கு ரூ.978.50 ஏலத்தொகை கோரிய கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம்,எப்படி திடீரென 1 பைசாவுக்கு இறங்கி வந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
