
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன்,பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் கனிமொழி,ஆ.ராசா,அமைப்பு பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் என 800-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் விவரம்…
திமுக கிளைச்செயலாளருக்கான அதிகபட்ச வயது 45. ஒருவர் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்கமுடியும். புதிய நிர்வாக அமைப்பாக மாநகரபகுதிகளில் கிளைப்பிரிவு தொடங்கப்பட்டு,கிளைச் செயலாளர் பொறுப்பு உருவாக்கப்படுகிறது.
45 வயதுக்கு மிகாதவர்,அப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்.அவரும் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்கமுடியும்.சென்னை,கோவை,மதுரை,திருச்சி,சேலம் ஆகிய மாநகரங்களில் இந்த கிளை அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.பிறமாநகராட்சிகளில் நிர்வாகச் சூழலுக்கேற்ப இதேபோன்ற அமைப்புகள் உருவாக்கப்படும்.
சென்னை மாநகராட்சியில் இனி உருவாக்கப்படும் வட்டங்கள்,சராசரியாக 10 ஆயிரம் வாக்குகள் கொண்டதாக இருக்கும்.மற்ற மாநகரங்களில் சராசரியாக 5 ஆயிரம் வாக்குகள் கொண்டதாக இருக்கும்.வட்டச்செயலாளரின் அதிகபட்ச வயது 50.ஒருவர் அப்பொறுப்பை 2 முறை மட்டுமே வகிக்கமுடியும்.
இதேபோல் பேரூராட்சி செயலாளரின் அதிகபட்ச வயது 60.இரண்டுமுறை மட்டுமே ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்படும்.சென்னை மாநகராட்சியில் பகுதிகள் 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும்,மற்ற மாநகரங்களுக்குச் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்கள் கொண்டதாகவும் இருக்கும்.
பகுதிச் செயலாளரின் அதிகபட்ச வயது 60.ஒருவருக்கு 2 முறை மட்டுமே வாய்ப்புவழங்கப்படும். 40 ஆயிரம் வாக்காளர்களை உள்ளடக்கிய ஒரு நகரம் உருவாக்கப்படும்.நகரச் செயலாளரின் அதிகபட்ச வயது 60.அவர் 2 முறை மட்டுமே பொறுப்பு வகிக்கமுடியும்.
மேலும்,சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியம் என்ற அடிப்படையில் ஒன்றிய அமைப்புகள் உருவாக்கப்படும்.ஒன்றியச் செயலாளரின் அதிகபட்ச வயது 60.அவரும் 2 முறை மட்டுமே பொறுப்பு வகிக்கமுடியும்.ஊராட்சி ஒன்றியத்தை அடிப்படை அலகாகக் கொண்டு ஒன்றியங்கள் மறுசீரமைக்கப்படும்.
எந்தச்சூழலிலும் ஒரு ஊராட்சி 2 ஆகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு ஒன்றியங்களுடன் இணைக்கப்படக் கூடாது. ஒவ்வொரு ஒன்றியமும் ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் அமைந்திருக்க வேண்டும்.ஒரு ஒன்றியம் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள் இடம்பெறும் நிலை தொடரக்கூடாது.
தற்போது கட்சியின் மாவட்டங்கள் எண்ணிக்கை 77 ஆக உள்ளது.வருவாய் மாவட்டங்களை அடிப்படை அலகாகக் கொண்டு 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும். அவ்வாறு பிரித்தபிறகு,ஒரு வருவாய் மாவட்டத்தில் ஒரு தொகுதி மட்டும் எஞ்சும் நிலை ஏற்பட்டால்,அந்தத் தொகுதி அதே வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட பொருத்தமான கட்சி மாவட்டத்துடன் 3 ஆவது தொகுதியாக இணைக்கப்பட வேண்டும்.
மாவட்டச் செயலாளரின் அதிகபட்ச வயது 70.மாவட்டச் செயலாளராகும் ஒருவர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே பொறுப்பு வகிக்கமுடியும்.இதனடிப்படையில், தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்கள்,110-ஆக உயரும்.கட்சி மாவட்டம் அதிகரிப்பதால் மாநகரச் செயலாளர்கள் என்ற பொறுப்பின் தேவை எழவில்லை.மாவட்டங்களில் இடம்பெறவுள்ள தொகுதிகளைக் திமுக தலைவர் மு.க ஸ்டாலினே முடிவெடுப்பார்.அவர் அறிவித்தவுடன், செயற்குழுக் கூட்டம் கூட்டப்படும்.
அதில் ஒன்றிய,நகர,பகுதி,பேரூர்,வட்ட,கிளை அமைப்புகள் 15 நாட்களுக்குள் உருவாக்கப்படும்.பிறகு கட்சித்தலைமை அனுப்பும் பிரதிநிதியின் முன்னிலையில்,மீண்டும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டி, ஒப்புதலைப் பெற்று,இறுதிப்பட்டியலைக் கட்சியின் தலைமைக்கு விரைந்து அனுப்பி வைக்கவேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுகவில் தற்போது 70 வயதை கடந்த 13 பேர் மாவட்டச் செயலாளர்களாக உள்ளனர். இவர்களின் பதவிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் தெற்கு – சுந்தர் (72),இராணிப்பேட்டை – ஆர்.காந்தி (80),திருவண்ணாமலை தெற்கு – எ.வ.வேலு (75),விழுப்புரம் வடக்கு – செஞ்சி மஸ்தான் (71),சேலம் கிழக்கு – எஸ்.ஆர்.சிவலிங்கம் (75),ஈரோடு தெற்கு – சு.முத்துசாமி (77),தஞ்சாவூர் வடக்கு – சாக்கோட்டை அன்பழகன் (72),புதுக்கோட்டை தெற்கு – இரகுபதி (76), மதுரை மாநகர் – தளபதி (70),தேனி தெற்கு – இராமகிருஷ்ணன் (77), விருதுநகர் – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (77),தூத்துக்குடி தெற்கு – அனிதா ராதாகிருஷ்ணன் (74),திருநெல்வேலி மேற்கு – ஆவுடையப்பன் (81) ஆகியோர் தங்களது பதவிகளை இழக்கவிருக்கின்றனர்.


