தமிழகத்தில் விரைவில் ஆட்சிமாற்றம் – திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

திண்டுக்கல் கிழக்கு,மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யாத,மேகதாது அணை கட்டுவதைத் தடுக்கத் தவறிய தவெக அரசைக் கண்டித்து நாகல் நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில்,முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்துப் பேசியதாவது….

கடவுளுக்கு அடுத்தபடியாக எல்லாரையும் ஜெயிக்கவைக்க முடியும் என சொன்னார் முதலமைச்சர் விஜய்.அதை நம்பி அனைவரும் ராஜினாமா செய்துவிட்டார்கள்.ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி,எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி.கட்சி கொறடா கட்டுப்பாட்டை மீறக்கூடாது.அதை மீறியவர்கள் பாதிபேர் ராஜினாமா செய்துவிட்டார்கள். மீதமுள்ள சிலபேர் ராஜினாமா செய்யாமல் உள்ளனர்.ராஜினாமா செய்யாமல் எம்எல்ஏ பதவியை தக்கவைக்க வேண்டும் என சிவி.சண்முகம்,எஸ்பி.வேலுமணி,நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இருந்து வருகின்றனர்.

இவர்கள் உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்டவேண்டும் என கூறுகின்றனர்.ஆனால் சட்டப்படி,திட்டமிட்டபடிதான் பொதுக்குழுவைக் கூட்டமுடியும்.இந்த ஆர்ப்பாட்டத்தில் நத்தம் விசுவநாதனை ராமநாதபுரத்திற்கும்,வேலுமணியை தேனிக்கும் தலைமை வகிக்கவேண்டும் என கூறினர்.ஆனால் மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்தால் மட்டுமே இந்த ஆர்ப்பாட்டத்தில் நாங்கள் கலந்துகொள்வோம் என நத்தம் விஸ்வநாதனும்,வேலுமணியும் கூறியுள்ளனர்.

ஜெயலலிதா காலத்தில் இதுபோல் பேசியிருந்தால் எத்தனை சவுக்கடி,போலீஸ் நடவடிக்கை என என்னென்ன நடக்கும் என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும்.பெருந்தன்மையின் உருவமாக இருக்கக்கூடிய எடப்பாடி மன்னித்து எம்எல்ஏவாக தொடரட்டும் என கடிதம் கொடுத்துவிட்டார்.கேவலம் மந்திரி பதவிக்காக வயது குறைந்தவர்களுடன் சேர்ந்து அறிக்கை கொடுத்து கூட்டத்திற்கு வரமாட்டேன் என சொல்கிறார்கள்.

அரசியல் ஆண்மை நத்தம் விஸ்வநாதன், சிவி.சண்முகம், வேலுமணிக்கு இருந்தால் உங்கள் சொந்த செல்வாக்கில்தான் ஜெயித்தோம் என்று சொன்னால் மரியாதையாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலைச் சந்தியுங்கள் பார்ப்போம்.அதில் நீங்கள் வெற்றி பெற்றால் உங்களது கால்களில் நாங்கள் அனைவரும் வந்து விழுகிறோம்.சசிகலாவையும்,டிடிவி.தினகரனையும் கட்சியில் இணைக்கவேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.இருவரின் தலைமை ஏற்று மீசை உள்ள ஆம்பளையாக இருந்தால் புதுக்கட்சி ஆரம்பியுங்கள்.

நத்தம் விஸ்வநாதன்,வேலுமணி,சிவி.சண்முகம், விஜயபாஸ்கர் எத்தனை பேர் போனார்களோ அவர்கள் மீது எல்லாம் வழக்கு உள்ளது.தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டிருக்கிறது.இது எல்லாம் ஒரு பிழைப்பா? இப்படியும் வாழவேண்டுமா? இவர்கள் வானத்தில் இருந்து குதித்து அதிமுகவை கண்டுபிடித்தவர்கள் போல் எல்லோரும் ஆடி கொண்டிருக்கின்றனர்.

சண்டாள பாவிகள் ஆட்சிக்கு வந்து பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ரூ.2,500 கொடுக்கிறேன் என கூறினர். ஆனால் இதுவரை கொடுக்கவில்லை.அதைப்பற்றி சட்டசபையில் பேசவில்லை.விவசாயிகளுக்கு முழுகடனை இரத்து செய்வேன் என கூறினர்.ஆனால் இதுவரை இரத்து செய்யப்படவில்லை.காவிரி பிரச்னைக்காக கர்நாடக முதலமைச்சர் சிவக்குமாரை பார்க்கப்போவதாகச் சொன்னார்.கடைசியில் நானாகத்தான் சொன்னேன் என கூறுகிறார்.சிவக்குமார் வரவேண்டாம் என கூறுகிறார்.இது எல்லாம் வேஷம் நமக்கே தெரிகிறது.

எம்ஜிஆர் காலத்தில் இருந்து காவிரி பிரச்னை ஓடுகிறது.தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்ற சூழ்நிலை உருவாகி கொண்டிருக்கிறது.அந்த இரகசியத்தை நான் இப்போது சொல்லமாட்டேன்.எத்தனை தப்பு செய்தாலும் பெத்ததாய்க்கும்,தந்தைக்கும் துரோகம் செய்தவன் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. அதுபோலத்தான் எம்ஜிஆர்,ஜெயலலிதா,எடப்பாடி பழனிச்சாமிக்கு துரோகம் செய்த யாரும் நல்லவிதமாக வாழ முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response