
தமிழகம் முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு ரூ.5 இலட்சம் முதல் ரூ.30 இலட்சம் வரை
அமைச்சர்கள் இலஞ்சம் பெறுவதாக விழுப்புரத்தைச் சேர்ந்த தவெக பெண் வழக்கறிஞர் ஞானசவுந்தரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 20 பேர் கொண்ட அரசு வழக்கறிஞர் பட்டியல் வெளியான மறுதினமே அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் உத்தரவிட்டார்.
இதுகுறித்து வழக்கறிஞர் ஞானசவுந்தரி அளித்த பேட்டியில்….
நான் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே என்னைப் புறக்கணித்துவிட்டார்கள்.கட்சி நிர்வாகிகள் என்னுடன் தொடர்பு கொண்டால் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டப்பட்டுள்ளனர்.அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பணம் பெறப்பட்டதாகக் கூறப்படும் ஆடியோ ஆதாரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தில் தேவையான நேரத்தில் தாக்கல் செய்யத் தயாராக இருக்கிறேன்.வழக்கை வாபஸ் பெறும்படி எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.அரசு வழக்கறிஞர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை.விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலே நடத்தப்படவில்லை.
தவெக தலைவரான முதலமைச்சர் விஜய் ஊழலற்ற நிர்வாகத்தை வலியுறுத்தி வருவதால்,அந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே இந்த விவகாரத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன்.கட்சிக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.முதல்வர் விஜய் ஊழலே நடக்கக்கூடாது என்று சொன்னார்.ஊழல் செய்தவர்களை விடமாட்டேன் என்று சொன்னார்.ஆனால் என் எதிரிலேயே நடந்த ஊழல் பற்றி விஜய்யைப் பார்த்து சொல்ல முடியவில்லை.அவரை ஒரு மாடலாக வைத்துதான் வழக்கு தொடர்ந்தேன்.
அதன்பிறகு என்னைத் தொடர்புகொண்டு நான் கேட்ட மகிளா கோர்ட் அரசு வழக்கறிஞர் பதவியை கொடுப்பதாகவும்,வழக்கை வாபஸ் பெறுமாறும் கூறினார்கள்.ஆனால் நாங்கள் நீதிமன்றம் சென்றுவிட்டோம். வழக்கை வாபஸ் வாங்கமாட்டோம் என்று உறுதியாகக் கூறிவிட்டோம்.இது தொடர்பாக 30 நிமிடம் பேசிய ஆடியோவையும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதியிடம் வழங்கியுள்ளோம்.மகளிர் நீதிமன்றத்தில் உங்களுக்குத்தான் பதவி என்று கூறியதற்கான ஆதாரமும் உள்ளது.பணம் வாங்கிக் கொண்டுதான் நியமனம் செய்தார்கள் என்பதற்கான ஆடியோவும் என்னிடம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதோடு முதலமைச்சர் விஜய் பார்வைக்கு என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….
தவெகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னை நீக்கிய முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும் என் மனதில் விஜய் மீது வைத்துள்ள மரியாதையும்,பாசத்தையும், நம்பிக்கையும் யாராலும் நீக்கமுடியாது.இந்த முடிவு எடுக்கப்பட்ட சூழ்நிலையை எண்ணி நான் மிகவும் வருத்தம் அடைகிறேன்.குறிப்பாக நான் எதிர்கொண்ட பிரச்னைகளும்,ஒரு பெண்ணாகவும்,தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவராகவும் நான் மேற்கொண்ட போராட்டமும்,தலைவர் நேரடிப் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்,மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் செயல்பாடுகளால்,ஒரு தலித் பெண்ணாகிய எனக்கு தவெகவில் இத்தகைய நிலை ஏற்பட்டு இருக்கிறது என்பதால் மிகுந்த மனஉளைச்சலையும்,வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.எனினும் என் கொள்கைகளும்,மக்கள் சேவையிலும் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


