விஜய் செய்தது சட்டப்படி குற்றம் – அப்பாவு அறிக்கை

முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று வெளியிட்ட அறிக்கையில்…

உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கண்காணிப்பில் சிபிஐ விசாரணையில் இருக்கும் 41 பேர் இறந்த கரூர்‌ சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது இந்திய அரசியல் சட்டப்படி குற்றம் என்ற விவரம் தெரியாதவரா எங்கள் தமிழ்நாட்டின்‌ முதல்வர்? இது‌ பதவிப் பிரமாணத்துக்கு எதிரான குற்றம் என்று முதல்வருக்கு தெரியாதா? 41 பேர் கொலைக்குக் காரணம் காவல்துறைதான் என்ற அபாண்டத்தை அள்ளி வீசுவது முதல்வருக்கு அழகா? இதனை இருமுறை டெல்லி சிபிஐ விசாரணைக்கு சென்றபோது மேற்படி குற்றச்சாட்டைத் தெரிவித்தீர்களா?

தமிழக முதல்வர், அரசு தலைமைச் செயலாளர்,முதல்வரின் தனிச்செயலாளர்கள் வழிகாட்டுதலோடு ஆட்சி நடத்துகிறாரா? அல்லது சினிமா தயாரிப்பாளர்கள்,இயக்குநர்கள் வழிகாட்டுதலோடு ஆணவ வசனம் பேசி வருகிறாரா?

சட்டப்பேரவையில் கட்சி நிதி என்று சொன்னதும் திமுகவினர் ஓடிவிட்டார்கள் என்று வாய்மொழியாகவும்,உடல் மொழியாகவும் நக்கலடிக்கும் முதல்வர் விஜய்,தேர்தலுக்கு முன் உங்கள் சட்டப்பேரவை வேட்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் ரூபாய் 2 கோடி முதல் ரூபாய் 10 கோடி வரை கட்சிநிதி பெற்றுக்கொண்டுதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாக உங்கள் இரசிகர்களும், தவெக கட்சியினரும் புலம்புவது உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையா? இது கட்சிநிதி இல்லையா? இதுதான் தூயகட்சி ஆட்சியின் இலட்சணமா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில்….

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.கரூரில் பேசும்போது ஆணவத்தோடு கொளத்தூரில் 5 நிமிடம் பேசினேன் முன்னாள் முதல்வரை கொத்து புரோட்டா போட்டுவிட்டேன் என்று சொல்லும் முதல்வர் அவர்களே,தேர்தலுக்கு முன் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தவெக சார்பாக இந்த விஜய்தான் போட்டியிடுகிறேன் என்று கெத்தாக சொன்ன உங்களுக்கும் 127 தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் கொத்துபுரோட்டா போட்டதை மறந்துவிட்டீர்களா?
கரூர் பிரச்சாரக் கூட்டத்திற்கு 12.30 மணிக்கு விஜய் வருவார் என்று உங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிகை பேட்டியில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கிறதா? 7 மணி நேரம் காலதாமதமாக கரூர் வந்து 20 நிமிடம் தாங்கள் பேசிய காணோளியை நினைவுபடுத்தி 41 பேர் இறப்பிற்கு யார் காரணம் என்பதை உங்கள் மனசாட்சியிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.உங்களைப் போன்று பழிவாங்கும் எண்ணம் இருந்தால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பார் ஆனால் மு.க.ஸ்டாலின்.அரசியலில் எப்போதும் கண்ணியத்தைக் கடைப்பிடிப்பவர்.

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் இரண்டும் ஊழலில் ஒன்றுதான் என்று கரூரில் பேசிய சிஎம் சார், தீர்ந்துபோன கட்சியில் ஊழல் செய்தவர்களைத் தொடர்ந்து உங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்வது தூயசக்தியா? அல்லது தூர்நாற்ற சக்தியா? சிஎம் சார்,இது ஜனநாயக நாடு.மக்கள்தான் எஜமான்கள்.விரைவில் காலமும் மாறும்! காட்சிகளும் மாறும்.ஆட்சியும் மாறும்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response