
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏப்ரல் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சிறப்புக் கூட்டத்தொடரை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543 இல் இருந்து 816 ஆக உயர்த்துவது மற்றும் தொகுதிகளை மறுவரையறை செய்வது தொடர்பான சட்ட முன்வடிவுகளைக் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 82, ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகும், மக்களவைத் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்ய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கிறது. இது, மக்கள்தொகைக்கு ஏற்ப மாநிலங்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் தொகுதி எல்லைகளை எல்லை நிர்ணய ஆணையம் (Delimitation Commission -டீலிமிடேஷன் கமிஷன்) மூலம் மாற்றியமைப்பதை உறுதி செய்கிறது.
தேர்தல் ஆணையமானது, தொகுதி மறுவரையறை என்பது சமீபத்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின்படி, தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்தல்.இது தேர்தல் கட்டமைப்பு நியாயமானதாக இருப்பதையும், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் மக்கள் பிரதிரிதித்துவம் சமவிகிதத்தில் இருப்பதையும் உறுதி செய்யும் என்று விளக்கியுள்ளது.
1951 ஆம் ஆண்டு நாட்டின் முதல் பொதுத்தேர்தலின்போது இந்திய மக்கள் தொகை 35 கோடியாக இருந்தது. அதற்கேற்ப 489 மக்களவைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. அதன்பின்னர், 1952 ஆம் ஆண்டு மக்கள்தொகை ஏற்றத்தின் அடிப்படையில், முதன்முறையாக தொகுதி மறுவரையறை 494 ஆக அதிகரிக்கப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 1961 இல், இந்திய மக்கள் தொகை 43 கோடி என்ற அளவை எட்டிய நிலையில், தொகுதிகளின் எண்ணிக்கை 522 ஆக அதிகரித்தது.
1971 ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை 543 ஆக உயர்த்தப்பட்டது. அதாவது ஒவ்வொரு உறுப்பினரும் தோராயமாக 10 இலட்சம் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் சீரமைக்கப்பட்டது.
1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 2001 வரை மாற்றக்கூடாது என்ற திருத்தத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அரசியலமைப்பு சட்டப்பிரிவு 82 இல் சேர்த்தார்.
இதனால், மக்கள்தொகை அதிகரித்தாலும் புதியதொகுதிகளை உருவாக்க இயலாது.அதன்பின், 2001 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 25 ஆண்டுகள் ஒத்திவைத்தார். 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 2002 இல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டாலும் கூட மக்களவைப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை மாறவில்லை.
மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால்,மக்கள்தொகை அதிகமாக உள்ள மாநிலங்களில் கூடுதல் பிரதிநிதித்துவமும், குறைவாக உள்ள மாநிலங்களில் குறைந்த பிரதிநிதித்துவமும் ஏற்பட்டு நாடாளுமன்ற சமநிலை பாதிக்கப்படும் என்று அது நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இப்போது 2026 இல் தொகுதி மறுவரையறையை அமல்படுத்துவதில் மோடி தலைமையிலான பாஜக அரசு தீவிரமாக இருக்கிறது.தென்மாநிலங்களின் அனுமதி இல்லாமலேயே இந்தித் திணிப்பு உணவுக்கட்டுப்பாடு உட்பட எல்லாச் சட்டங்களையும் கொண்டுவந்துவிடலாம் என்பதுதான் இதற்குக் காரணம்.
இதுகுறித்து முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது….
மக்களவையில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை தற்போது 39.இது 58 ஆக உயரும் என்று சொன்னார்கள்.இது வெறும் மாயை என்று நான் சொன்னேன்.தொகுதி மறுவரையறை செய்யும்போது 58 என்பது 46 ஆக குறையும்.
அதேநேரத்தில், உத்தரப்பிரதேசத்தின் தற்போது எண்ணிக்கை 80. இது முதலில் 120 ஆக உயரும், தொகுதி மறுவரையறைக்குப் பின் சுமார் 140 ஆக மேலும் உயரும்
மக்கள் தொகையை நிலைப்படுத்திய 5 தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநித்துவம் 24.3%. இது குறைந்து 20.7% ஆகும். மக்களவையில் தென்மாநிலங்களின் குரல் அழுத்தப்படும்,ஒடுக்கப்படும்அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்துத் தோற்கடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தச் சட்டமுன்வடிவுக்கு, தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றன.
தொகுதி மறுவரையறை தென்மாநிலங்களுக்கான வரலாற்று அநீதி என்று கூறி, ஏப்ரல் 16 அன்று இதனை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் கறுப்புக்கொடி போராட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோரும் தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதாவுக்கு கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
ஒன்றிய அளவில்,பாஜக அல்லாத பெரும்பாலான கட்சிகள் தங்களின் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.


