
அதிமுக கூட்டணியில்,2021 தேர்தலில் கோவை தெற்கு தொகுதி மட்டும் பாஜவுக்கு ஒதுக்கப்பட்டது.இம்முறை கூடுதலாக ஒரு தொகுதி பெற்றுவிடவேண்டும். அதில்,அண்ணாமலையை களம் இறக்கவேண்டும் என உள்ளூர் பாஜகவினர் தீவிரமாக இருந்தனர். கோவையில் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவார் எனக் கூறப்பட்டது.இதற்காக இரகசிய ஆலோசனைக் கூட்டங்கள் தெருமுனைப் பரப்புரைகளில் அண்ணாமலை பங்கேற்று வந்தார்.
ஆனால், தொகுதிப் பங்கீட்டில் கோவை வடக்கு தொகுதி மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால், வானதி சீனிவாசன் மட்டுமே போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இது அண்ணாமலை ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அண்ணாமலைக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பான பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது தனி ஆவர்த்தனம் செய்து வந்த அண்ணாமலை, கடந்த சில மாதங்களாகவே பாஜகவால் ஓரங்கட்டப்பட்டு வருகிறார். மேலும் சொத்துக் குவிப்பு, ரியல் எஸ்டேட் வியாபாரம் போன்ற சர்ச்சைகளிலும் சிக்கிய அவர், தனிக்கட்சி ஆரம்பிக்கலாம் என்ற தகவலும் வெளியானது.2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ரூ.4 கோடி பணம் தொடர்வண்டியில் கைப்பற்றப்பட்ட விவகாரத்திற்கு அண்ணாமலையே காரணம் என கூறப்படும் நிலையில், இருவருக்கும் இடையே பனிப்போர் வலுத்து வந்தது. இதேபோல குறுகிய காலத்தில் அண்ணாமலையின் வளர்ச்சியை, வானதி சீனிவாசன், எல்.முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இரசிக்கவில்லை.
இருந்தும், சிங்காநல்லூர் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. இந்த 6 தொகுதிகளில் தோல்வியடைந்தால் தனது மதிப்புக்கு பங்கம் வரும் என்பதால், தந்தையின் உடல்நிலையைக் காரணம் காட்டி அண்ணாமலை விலகினார். இந்நிலையில் வானதி சீனிவாசன், எல்.முருகன், நயினார் நாகேந்திரன் அணிகள் அண்ணாமலைக்கு எதிராக தொடர் புகார்களை டெல்லி தலைமைக்கு அனுப்பி வந்தனர். அதேநேரத்தில், பாஜகவிற்கு கணிசமான வாக்கு வங்கியுள்ள கோவையில் அண்ணாமலைக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்று அவருக்கு எதிராக தலைமையிடம் போர்க்கொடி தூக்கின. எடப்பாடியும் நயினாரிடம், அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது எனல் கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தக் காரணங்களால் அண்ணாமலைக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படாது என்று சொல்கிறார்கள்.


