திமுகவின் முதல்பெண் மாணவரணிச் செயலாளர் ஈரோடு வீரமணி – விவரம்

திமுக மாணவரணிச் செயலாளராக முதல்முறையாக ஈரோட்டைச் சேர்ந்த ஜெ.வீரமணி என்கிற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.இதுவரை மாணவரணிச் செயலாளராக இருந்த இராஜீவ் காந்தி, கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளராக இருந்தவர் இராஜீவ் காந்தி. 2021 ஆம் ஆண்டு அந்தக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். 2025 ஆம் ஆண்டு திமுகவின் மாணவரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.இப்போது அந்தப் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டு ஜெ.வீரமணி, மாணவரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்….

திமுக மாணவர் அணி துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் ஜெ.வீரமணி மாணவர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்,திமுக மாணவர் அணிச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வழக்கறிஞர் இரா.இராஜீவ்காந்தி, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, திமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் திமுக மாணவர் அணியின் வரலாற்றிலேயே செயலாளர் பொறுப்புக்கு நியமிக்கப்படும் முதல்பெண் என்ற பெருமையை வீரமணி பெற்றுள்ளார்.

ஜெ.வீரமணியின் தந்தை ஈரோடு இரத்தினசாமி, திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்.பெரியார் பெருந்தொண்டர் என்று பெயர் பெற்றவர்.அவர்,இப்போது திராவிடர் கழகத்தலைவராக இருக்கும் ஆசிரியர் கி.வீரமணியின் பெயரை, தன் மகளுக்குச் சூட்டி பெருமையடைந்தவர்.

அவருக்கு மாண்வரணிச் செயலாளர் பொறுப்பு கிடைத்திருப்பது ஈரோடு திமுகவினர் மற்றும் திகவினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Response