சசிகலாவால் கடும் பாதிப்பு – அமித்சாவிடம் அலறிய எடப்பாடி

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் மோடி மதுரையில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றார்.அவரது வருகைக்கு முன்பே தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய பாஜக திட்டமிட்டது.ஆனால், எடப்பாடி ஒத்துழைக்காததால்,இழுபறி நீடித்தது.

மோடி வந்து சென்ற பிறகு பியூஸ் கோயல், எடப்பாடி மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் மதுரையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.அதில்,எந்த உடன்பாடும் எட்டாததால் எடப்பாடி பழனிச்சாமி அன்று இரவு சென்னை திரும்பினார்.

இதனால் கோபமடைந்த அமித்ஷா,டெல்லிக்கு வரச் சொல்லி எடப்பாடிக்கு உத்தரவிட்டார்.அவரது அழைப்பை ஏற்று,நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.அங்கு அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் 11 மணி வரை எடப்பாடி ஆலோசனை நடத்தினார்.

டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை சென்னைக்கு திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்….

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினேன்.தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து இருவரும் கலந்து பேசினோம்.தேர்தலில் இருகட்சிகளும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் விவாதித்தோம்.எங்கள் கூட்டணி வலுவாகவும், சுமுகமாகவும் இருக்கிறது.சில புதியகட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

அவை அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. விரைவில் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கும். தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதனால் எந்த அவசரமும் தற்போது இல்லை. தொகுதி உடன்பாடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவோம். அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அதிமுக தலைமையிலான கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைப்போம் என்றார்.

அதன்பின், சசிகலா புதியகட்சி தொடங்கி உள்ளதால் உங்களது கூட்டணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளதா? அதுகுறித்து ஏதேனும் ஆலோசனை நடத்தினீர்களா என்ற கேள்விக்கு,

சசிகலாவை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக எந்த ஒரு விவாதமும் செய்யவில்லை.அது தேவையற்ற கேள்வி, அதை இத்துடன் விட்டுவிடுங்கள் என்றார்.

தொடர்ந்து, சசிகலா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் கடுப்பான எடப்பாடி, அவரிடம் போய்க் கேளுங்கள். அவரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

அதேநேரம், அமித்ஷா எடப்பாடி சந்திப்பின்போது சசிகலா அரசியல் நுழைவு குறித்தே பெருமளவில் பேசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.சசிகலா வருகையால் நமது வெற்றி கடுமையாக பாதிக்கப்படும் என்று அமித்ஷாவிடம் எடப்பாடி சொல்லிவிட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response