எடப்பாடி செய்வது தவறு – கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது…..

பலரும் இந்திய சுதந்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளனர். அவர்கள் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுவதில் தவறில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் நேரத்தில் மறைந்த தலைவர்களின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்ககூடாது.

அதிமுக 1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம். அதற்கு முன்பு 30 ஆண்டுகாலம் திரைத்துறையில் சாதி ஒழிப்பு, மதவேறுபாடு, பொருளாதார வேறுபாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார் எம்ஜிஆர். எந்த ஜாதி, மொழி, மதம், இனத்தோடு தொடர்புபடுத்திக் கொள்ளாமல் இருந்தார். அவ்வாறே கட்சியையும் வழிநடத்தினார். முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு ஆதரவாக, பட்டியலின மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு 1995 இல் கொடியன்குளம் சம்பவம் சர்வதேச பிரச்சினையாக உருவானது.

அவர் அதே ஆண்டு மக்களின் கோபத்தைத் தணிப்பதற்கு விருதுநகரை மையமாக வைத்து சுந்தரலிங்கனார் போக்குவரத்துக் கழகத்தை அறிவித்தார். இந்தப் பெயரை வைத்ததற்காக தென்தமிழகத்தில் பிரச்சினை ஏற்பட்டது. ஆளுங்கட்சியை எதிர்த்துப் பேச எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு எடப்பாடி பழனிச்சாமி திடீரென மதுரை விமான நிலையத்துக்கு பெயர் சூட்டுவது குறித்து பேசியுள்ளார். உள்துறை அமைச்சரிடமும் பேசியுள்ளார்.

உள்கட்சிக்குள் தினகரன், ஓபிஎஸ், சசிகலாவை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார் என்பது எல்லோருக்கும் தெரிகிறது. அதை அவர் அரசியல் ரீதியாகத்தான் கையாள வேண்டும். பெயர் வைப்பதில் ஆதரவும் இருக்கும், எதிர்ப்பும் இருக்கும். எடப்பாடி பழனிச்சாமி தேவையில்லாமல் சர்ச்சைக்குரிய பேச்சை எடுப்பதன் அவசியம் என்ன. ஒரு தரப்பு ஆதரவு கிடைத்தபோதும், மற்றொரு தரப்பு எதிர்க்கத்தான் செய்யும்.

உங்கள் கட்சிக்குள் தினகரன், ஓபிஎஸ்., சசிகலா பிரச்சினையை நீங்கள் சரிசெய்து கொள்ளுங்கள். ஆனால் பெயர் வைத்து அரசியல் செய்ய வேண்டாம். தங்களுடைய அரசியல் சிக்கலைத் தீர்க்க மறைந்த தலைவர்களைப் பலிகடா ஆக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response