ஐபிஎல் போட்டி நடக்குமா? – உச்சகட்டப் பதட்டத்தில் சென்னை சேப்பாக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

சாலை மறியல், தொடர்வண்டி மறியல், கர்நாடக எல்லை முற்றுகை போன்ற போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில், சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி நடத்தினால் போராட்டம் நடத்துவோம் என்று பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளன. பல அமைப்புகள் போட்டியைக் காண ரசிகர்கள் நேரில் செல்லக்கூடாது என தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

சீமான், வேல்முருகன் மற்றும் தமிழ்த்தேசிய அமைப்புகளின் க்டும் எதிர்ப்பு மற்றும் எச்சரிக்கை காரணமாக போட்டி நடக்கும் சேப்பாக்கம் பரபரப்பாக இருக்கிறது.

கிரிக்கெட் போட்டி எதிர்ப்பு அலைகள் காரணமாக சேப்பாக்கம் மைதானத்தில் கூடுதல் கமிஷனர் சாரங்கன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 4 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். கிரிக்கெட் மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் காவலர்கள் அரண் போல நிறுத்தப்படுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதுதவிர அருகில் உள்ள பறக்கும் ரெயில் நிலைய பகுதிகளிலும், தண்டவாளங்களிலும் ஏராளமான காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். போட்டியைக் காணவரும் ரசிகர்களை யாரேனும் தடுத்தால் அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள்.

அந்த பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் எந்தவித போராட்டங்களுக்கும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகக் காவல்துறை மட்டுமின்றி மத்தியப்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

தமிழ்மக்களின் உணர்வுகளுக்குச் சற்றும் மதிப்பளிக்காமல் போட்டி நடைபெறுவது வருத்தத்திற்குரியது என்று பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Leave a Response