
நான் கமலஹாசன் என்ற திரைப்பட நடிகரின் ரசிகன். அவர் நல்ல கலைஞர். பதினாறு வயதினிலே, அவர்கள், சலங்கை ஒலி, மூன்றாம் பிறை, ராஜ பார்வை, மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்களில் அவருடைய நடிப்பை மிகவும் ரசித்தேன். இப்போதும் ஏதாவது கமல் படம் தொ.கா.வில் ஓடுகிறதென்றால் உட்கார்ந்து பார்க்கிறேன்.
ஆனால் கடந்த சில பத்தாண்டுகளாக அவர் நடித்த படங்கள் எல்லாம் வெகு சுமார். பிக் பாஸ் நிகழ்ச்சியைச் சகிக்க முடியவில்லை. அவரது சிட்டுரைக் கவிதைகளை விடுகதை போலப் பார்த்துக் கிண்டலடிக்க முடிகிறது.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல என்றாலும் சீமான் கேட்டது போல, ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது ஊழலுக்கு எதிராகக் களமிறங்கியிருந்தால் கமலைப் பாராட்டியிருக்கலாம். இப்போது கலங்கிய ஓடையில் மீன் பிடிக்க வரும் எல்லோரையும் போல அவரும் ஒரு அரசியல் வணிகராக அறிமுகமாகிறார்.
யார் பச்சைத்தமிழர் என்ற சாணியடிப்புக்கு அஞ்சித் தம்மைப் பச்சைத்தமிழர் என்று பறை சாற்றும் ரஜினிகாந்த் கொஞ்சம் தயங்கவே “சைக்கிள் கேப்”பில் கமல் மூக்கை நுழைத்து விட்டார். குறைந்தது அவரது திரைப்படப் பின்னணி அவரது அரசியலுக்குச் சுவை கூட்டும். கார்த்திக் முத்துராமன் அளவுக்காவது அவருக்கு வாக்கு கிடைக்கலாம். அதற்குள் முதலமைச்சர் கனவு காண்கிறார் என்று செய்தி பார்த்தேன்.
“வருங்கால முதலமைச்சர்” என்று தமிழகம் எத்தனையோ பேரைப் பார்த்து விட்டது. இன்னும் ஒன்றுக்கு என்ன குறைச்சல். வரட்டும். சிட்டுரையைப் பேருரையாக்கி விளக்கட்டும். குறைந்தது இவர் அ.தி.மு.க.வில் சேர்ந்து அம்மாவின் ஆட்சியை மீட்பேன் என்று சொல்ல மாட்டார். அதற்காவது நன்றி சொல்லலாம்.
கமலின் வருகை வழக்கப்படி முகநூலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் நல்லதே. கமலின் அரசியலைக் குறை சொல்பவர்கள் அவரது அரசியலை மட்டும் குறை சொல்வது நல்லது. அவரது சாதிப்பிறப்பைப் பற்றித் தப்பித் தவறிக்கூடச் சொல்லாமல் இருப்பதுதான் பண்புள்ள செயல். சப்பாணியின் அரசியல் நுழைவால் பரட்டையின் நுழைவுக்கு இடக்காகும் என்று யார் தான் எதிர்பார்த்திருப்பார்கள்?
-மணி மணிவண்ணன்


