
பல ஆண்டுகளாகத் திரைப்படங்களில் நடித்துப் பெற முடியாத புகழை ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பெற்றார் ஓவியா.இப்போது அவருக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் ஓவியா நடிப்பில் தயாரான ‘சீனி’ என்ற படம் இப்போது ‘ஓவியாவை விட்டா யாரு’ என்று பெயர் மாறி இருக்கிறது. ஓவியா பெயரைத் தலைப்பில் போட்டால் படம் பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என்ற அளவு இவருக்கு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.
அதுமட்டுமின்றி, தமிழில் பல புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பும் ஓவியாவைத் தேடி வந்திருக்கிறது. தற்போது ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படங்களில் நடித்திருக்கும் ஓவியாவை இயக்குநர் ஆனந்த்ஷங்கர் தனது புதிய படத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார். அடுத்து ‘யாமிருக்க பயமேன்’ படத்தின் 2-ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார். இதில் கிருஷ்ணாவின் ஜோடி ஆகிறார்.ஓவியாவின் புகழுக்காகவே கலகலப்பு 2 படத்தை சுந்தர்.சி தொடங்குகிறார் என்றும் சொல்கிறார்கள்.
இவை மட்டுமின்றி, ஓவியா நடித்துள்ள மலையாளப் படங்களையும், தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 6 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘மனுஷ்ய மிருகம்’ என்ற மலையாளப் படம் தமிழில் ‘போலீஸ் ராஜ்யம்’ என்ற பெயரில் வர இருக்கிறது. இதில் பிரித்விராஜ், கிரண், ஓவியா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஓவியாவுக்காகவே இப்படம் தமிழ் பேசவிருக்கிறது என்பதுதான் குறிப்பிடத்தக்கது.


