
பெங்களூர் சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான பணத்தை தண்ணீராக செலவு செய்து, தேவையான எல்லா வசதிகளையும் சசிகலா பெற்றிருக்கிறார்.
குறிப்பாக ஜெயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிடாமல் தனக்கு தேவையான உணவை சசிகலா, ஜெயிலில் பிரத்யேகமாக தயாரித்து சாப்பிடுகிறார். மேலும் அந்த உணவைத் தயாரிக்க சசிகலாவுக்காக தனி சமையல் அறை கட்டப்பட்டது.
பெங்களூர் சிறையில் போயஸ் கார்டனைச் சேர்ந்த சமையல்காரி ஒருவர் தங்கி இருந்து சசிகலாவுக்கு உணவு தயாரித்து கொடுத்து வந்தார். சசிகலாவுக்கு வாய்க்கு ருசியாக வகை, வகையாக சமைத்து போடுவதற்கு என்றே அந்த
சமையல்காரியை போயஸ்கார்டனில் இருந்து வரவழைத்து பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் தங்க வைத்திருந்துள்ளனர்.
ஒவ்வொரு வசதியையும் பெற பணத்தை லஞ்சமாக கொடுத்தார் சசிகலா.
சசிகலாவைச் சந்திக்க சென்ற பார்வையாளர்கள், நேரடியாக அவரது அறை வரை சென்று வந்துள்ளனர். இதற்கு அனுமதி கொடுக்கவும் சிறைத்துறையினர் லஞ்சம் பெற்றதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இப்படியெல்லாம் ஏகப்பட்ட செய்திகள். இவை போதாதென்று சசிகலாவின் அறைகள் என்று தொலைக்காட்சிகள் சில அறைகளைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. அந்த அறையில்தான் சசிகலா இருக்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம்? என்பது மட்டுமின்றி,
அவற்றைப் பார்க்கிற யாருக்கும், சிறைக்குள் போய் போனில் பேசவே முடியாது எனும்போது வீடியோ எப்படி எடுக்கமுடிந்தது? அதை எடுத்தவர் யார்? என்கிற கேள்விகள் வரவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.
சசிகலா குற்றவாளி என்பதால் அவர் தொடர்ந்து குற்றங்களைச் செய்வார் என்கிற பொதுப்புத்தியை சாதகமாக்கிக் கொண்டு ஆதாரமில்லாத இந்தச் செய்திகள் பரப்பப்படுகின்றன.
ரூபா என்கிற அதிகாரி மாநில அரசின் கட்டுப்பாடுகளை சர்வசாதரணமாக மீறுகிறார். அவருக்கு அந்த துணிச்சல் வந்ததெப்படி?
இதற்குப் பின்னால், மத்திய பாஜக அரசின் அதிகார அத்துமீறல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சசிகலா விவகாரத்தை ஊதிப்பெரிதாக்குவதன் மூலம் சசிகலாவிடம் உள்ள சொத்துகளைப் பிடுங்குவது ஒன்று, காங்கிரஸ் ஆட்சியில் இவ்வளவு அநியாயங்கள் நடக்கின்றன என்று சொல்லி அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது ஆகிய இரண்டு நோக்கங்களையும் நிறைவேற்றிக்கொள்ளத் திட்டமிட்டு பாஜக இவற்றை அரங்கேற்றிவருவதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர்.


