இலங்கை அதிபர் தேர்தல் சனவரி 8 ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி ஈழத்தமிழரொருவரின் பதிவு….
ஐயா விக்கினேஸ்வரனை கதிரைக்கு கொண்டு வர நடத்தப்பட்ட தேர்தலின் போதும், இதெல்லாம் ஓட்டுமாட்டு, இவரால எதுவும் செய்ய முடியாது எண்டுதான் எழுதினன். ஆனால் அப்பவும் பலர், அவரே தமிழரின் ஒரே மீட்பர் எண்டெல்லாம் எழுதித் தள்ளிக்கொண்டிருந்திச்சினம். ஆனால் கடைசியில் நடந்தது…?
இப்ப மைத்திரியாம். நான் எழுதுறன் அவரால ஓர் ஆணியக்கூட பிடுங்க முடியாதெண்டு. ஏனெண்டால் அவர் சேர்த்திருக்கிற கூட்டம் அப்பிடி. அதோட மஹிந்தா எதிர்கட்சியில அமர்ந்தா எப்பிடியிருக்கும்? கற்பன பண்ணி பாருங்கோ…! எல்லாரும் மாற்றம் மாற்றம் எண்டுகினம். என்னடா மாற்றம் எண்டு கேட்டால் மஹிந்தவ கழட்டுறது மாற்றமாம். அடநாதாரிப் பயலுகளே..! மஹிந்தவ கழட்டிட்டிட்டு மைத்திரிய கொண்டந்தால் எங்கடா மாற்றம் நடக்கப் போகுது? மஹிந்தவின்ர கட்டுப்பாட்டில இருந்த சுதந்திரக் கட்சியின்ர ஆட்சி, கட்சியின் சொந்தக் காரியிட்ட போகப் போகுது ( அதுதான் சுதந்திரக் கட்சி, எங்கட சமாதான தேவதை சந்திரிக்காவின்ர கட்சிதானே). ஒரிஜினல் சுதந்திரக் கட்சி தமிழனுகளுக்கு செய்ததுகள இப்பிடி காலம் காலமா நடந்த மாற்றங்கள் மறக்கச் செய்ததுதான் எங்கட தலைவிதி.
அதோட மைத்திரி சொல்றார், மஹிந்த படிச்சப் பள்ளிக்கூடத்துக்கு தான்தானாம் பிரிஞ்சிப்பல். மைத்திரியின் மாணவானான மஹிந்தவே இவ்வள கொடுமக்காரனெண்டால், பிரிஞ்சிப்பல் எப்பிடியிருப்பார்?
மைத்திரி வந்தால் இவ்வள காலமும் மூச்சுவிட முடியாமல் திணறின தமிழர்களுக்கு மூச்சுவிட காலம் கிடைக்கும் எண்டும் ஒரு கூட்டம் எழுதித் திரியுது. 7 வருசத்துக்கு முதலும் சந்திரிகா ஆட்சிய கவிட்டுப்போட்டு ரணில் வரேக்க இதே வசனத்தத் தான் சொல்லிச்சினம். அதாவது போர்ல அடிபட்ட சனத்துக்கு மூச்சுவிட கொஞ்ச காலம் தேவையாம். கடைசியா 2009 இல இருந்த இருந்த “மூச்சுக்கும்” சீவன்போனதுதான் மிச்சம். மஹிந்தா நெஞ்சில தான் குத்துவார். ரணில் எப்பிடி குத்துவார் எண்டது எங்களுக்கு நல்லாவே தெரியும்.
உடன எங்கட ஆக்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடுவினம். அதாவது தாங்கள் சொல்றத ஏற்காட்டி இவன் மஹிந்தவின்ர ஆள். அதுக்காகத்தான் சொல்றன், மஹிந்த வீட்டுக்குப் போக வேண்டியவர்தான். 15 வருசம் ஆட்சியில இருக்கிறதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். ஆனால் திருப்பி ஆட்சிக்கு வருவரெண்டால் இனி இலங்கையில அவரின்ட சூரியன் அஸ்தமிக்காது. மைத்திரி கூட்டம் ஆட்சியப் பிடிச்சா மட்டும் மஹிந்தா செய்த அட்டகாசங்களுக்கெல்லாம் இவை தீர்வு தருவினம் எண்டு நம்பமுடியாது. இவை மிஞ்சி மிஞ்சிப் போனால் மஹிந்தவ நாடுகடத்துவினம். இவ்வள காலமும் ( பென்சன் காலம் வரை) அதிகாரக் கதிரையில சகல சொகுசுகளுடனும் வாழ்ந்த ஒரு மனுசனுக்கு அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ நல்ல பங்களா குடுத்து குடியமர்த்திவிடுறதெல்லாம் பெரிய தண்டனை எண்டு எங்கடையாக்கள் எழுதுவாங்கள். சுத்துற உலகம் நிண்டு பல நூற்றாண்டாகிட்டுது” எண்டு சம்பந்தன் சொன்னால், ”அது சரிதான், சரிதான்” எண்டு ஆமா சாமி போடும் எங்கட ஊடகங்களும், புத்திசீவியளும் இருக்கிறவரைக்கும் இப்பிடிதான் நம்பிக் கொண்டும், மாற்றம் வரும் மாற்றம் வரும் எண்டு புழுகிக் கொண்டும் இருந்து அழியப் போறதுதான் எங்கட இனத்தின்ர தலைவிதி.
நான் இப்ப சொல்றன் பாருங்கோ, 5 வருசம் அல்லது 10 வருசம் முடிய இண்டைக்கு மைத்திரிய ஆதரிக்கிற அதே கூட்டம் அந்த நேரம் மஹிந்தவ ஆதரிக்கும். அல்லது மஹிந்தவின்ர மகன ஆதரிக்கும். அப்பவும் இப்பிடித்தான் மாற்றம் மாற்றம் எண்டு புலம்புவினம். அப்பவும் பாவம், ரணில்தான் மாறியிருப்பார் மஹிந்த கட்சிக்கு.
எனக்கு என்னவோ இப்பிடிதான் சொல்லத் தோணுது, சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் அமைச்சர் பதவி கிடைச்சால் தான் எங்கட சனத்த இந்த அரசியலில இருந்து காப்பாத்த முடியும். இல்லாட்டி கிழிஞ்சு தொங்கிக் கொண்டிருக்கிற கோவணத்தையும் உருவிப் போட்டு அம்மணங்குண்டியாத்தான் அலையவிடப் போறாங்கள்.
வாழ்க மாற்றம்….!அதுக்காக நான் ஓட்டுப் போடாமல் விடமாட்டன். போடுவன், சிறிசேனாவுக்கு. நேற்று எங்கட தமிழ் பேப்பருகளெல்லாத்தையும் விலைக்கு வாங்கியிருந்தாரே ஒரு சிறிசேனா அவருக்கு. எங்களின் சனநாயகக் கடமை உங்களுக்கு காமடியெண்டால், எங்களின்ட கடமையும் அல்டிமேட் காமடிதான் பாருங்கோ