சகாயத்திடம் புகார் சொல்ல அச்சப்படும் மக்கள், காரணம் காவல்துறை?

 

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடுகளை பற்றி
03-12-2014 முதல் ஆய்வு செய்து வருகின்றனர் சகாயம் ஆய்வுக் குழுவினர்.

ஏற்கனவே தமிழகத்தின் 32- மாவட்டத்திலும் நடைபெற்று உள்ள அனைத்து கனிமவள முறைகேடுகளை ஆய்வு செய்ய 11.09.2014, 28-10-2012 -இல் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, 25-11-2014 அன்று மதுரை மாவட்டத்தில் பெரிய அளவில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடுகளை பற்றி சகாயம் ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்துவிட்டு, படிப்படியாக மற்ற பகுதிகளில் செய்யலாம் என உத்திரவு இட்டு உள்ளது.

இந்நிலையில் சகாயம் ஆய்வுக்குழுவினருக்கு மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடுகளை பற்றி முழுமையாக வெளிக்கொண்டு வருவதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றியும், 32- மாவட்டத்திலும் நடைபெற்று உள்ள அனைத்து கனிமவள முறைகேடுகளையும் சகாயம் ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வைக்கும் வகையிலும், தமிழகத்தின் 32- மாவட்டத்திலும் நடைபெற்று உள்ள அனைத்து கனிமவள முறைகேடுகளைப் பற்றிய தேவையான விவரங்களைப் பெற்றுத் தர உதவும் வகையிலும் சென்னையில் 18.12.2014, வியாழக்கிழமை அன்று கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க தமிழக ஒருங்கிணைப்பு குழுவினரும், சிறப்பு அழைப்பாளர்களும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாணவ அமைப்பினரும் கூடி கலந்து பேசினர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்…

1.மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகளைப் பற்றி மக்கள் அச்சமின்றி உண்மைகளை எல்லாம் சகாயம் ஆய்வுக்குழுவினரிடம் வெளியே சொல்ல பயப்பட்டு வருகின்றனர். இது நாங்கள் மேலூர் பகுதி கிராமங்களில் துண்டறிக்கை பிரச்சாரம் செய்த போது நேரில் கண்ட உண்மையாகும். கிரானைட் முறைகேடுகளைப் பற்றிய உண்மையை ஆய்வுக் குழுவினரிடம் வெளியே சொன்னால் கிரானைட் உரிமையாளர்களால் கடுமையாக பாதிக்கப்படுவோம், எதிர்காலம் பாதிக்கப்படும் என பாதிக்கப்பட்ட மக்கள் கடுமையான அச்சத்தில் உள்ளனர்.

கடந்த 2012 காலத்தில் கிரானைட் முறைகேடுகளை பற்றிய ஆய்வுக்கு தமிழக அரசால் அன்றைய ஆட்சித்தலைவர் அன்சூல் மிஸ்ரா அவர்கள் நியமிக்கப்பட்ட போது, தமிழக அரசு முழுமையாக ஒத்துழைத்ததுடன், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் ஒத்துழைத்து செயல்பட்டதால், அச்சம் எதுவுமின்றி மக்கள் முழுமையாக தனது பாதிப்புகளை பற்றி ஆட்சித்தலைவர் அன்சூல் மிஸ்ராவிடம் வெளிப்படையாகத் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் செயல்படும் சகாயம் ஆய்வுக்குழுவுக்கு தொடர்ச்சியாக தமிழக அரசு எவ்வித ஒத்துழைப்பும் கொடுக்காமல் உள்ளது. மாற்றாந்தாய் மனப்பான்மையோடு சகாயம் ஆய்வுக்குழுவிடம் தமிழக அரசு செயல்படுகிறது. மேலும் கனிமவள முறைகேடுகளை பற்றி அம்பலப்படுத்தும் பலர் மீது மேலூர் பகுதியில் காவல் துறையினர் தொடர்ந்து பல பொய்வழக்குகளை சகாயம் ஆய்வுக்குழு ஆய்வுப் பணிகளை தொடங்கும் முன்பே போட்டு உள்ளனர். காவல்துறையினரின் இந்த அச்சுறுத்தும் செயல்பாடுகளாலும், காவல்துறையினரின் நேரடியாக கிரானைட் முறைகேடு செய்பவர்களுக்கு ஆதரவான செயல்பாடுகளாலும், தமிழக அரசின் செயல்பாடுகளாலும் சகாயம் ஆய்வுக் குழுவினரிடம் பொதுமக்கள் புகார் கொடுக்க அச்சப்படுகின்றனர்.

மேலும் தற்போது மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள விஜயேந்திர பிதாரி அவர்கள், நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய போது தாதுமணல் கொள்ளையடித்து வரும் வைகுண்டராசன் அவர்களின் கையாள் போலவே செயல் பட்டவர். கூத்தன்குழி போன்ற ஊரிலும், பல்வேறு கடற்கரை ஊர்களிலும் வைகுண்டராசன் அடியாட்களின் அத்தனை சட்ட விரோத செயல்பாடுகளுக்கும் நேரடியாகவே துணை நின்று செயல்பட்டவர். தமிழக அரசால் தாதுமணல் கொள்ளை பற்றி ஆய்வு செய்ய 2013-செப்டம்பரில் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு நெல்லை மாவட்டத்திற்க்கு வந்த போது, அவருடன் உடன் வந்த வைகுண்டராசனின் தாதுமணல் கொள்ளையை பற்றி அம்பலப்படுத்திய பத்திரிக்கை யாளர்களை காவல்துறை பாதுகாப்போடு வைகுண்ட ராசன் அடியாட்கள் நேரடியாக பிடித்து வைத்துக் கொள்ள துணை நின்றவர். தற்போது கிரானைட் கொள்ளையை அம்பலப்படுத்து பவர்கள் மீது தொடர்ந்து மேலூர் பகுதி காவல் துறையினர் பொய் வழக்கு போட துணை நின்று வருகிறார்.

எனவே சகாயம் ஆய்வுக்குழுவினரிடம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தைரியமாக புகார் கொடுக்க வேண்டுமென்றால், குற்றசாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள விஜயேந்திர பிதாரி உட்பட காவல்துறையினர், கனிமவளத் துறை மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த உயர்அதிகாரிகளில் இருந்து கீழ்மட்ட அதிகாரிகள் வரை மாற்றம் செய்ய வேண்டும். மதுரை மக்களால் பல்வேறு வகையில் அறியப்பட்டுள்ள நேர்மையான அதிகாரிகளை நியமித்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் சுமூக சூழலை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசு செயல்படவில்லையெனில், சகாயம் ஆய்வுக்குழுவினரின் ஆய்வுபணிக்கு தமிழக அரசு ஒத்துழைக்க மறுக்கிறது என்றே அனைவரும் கருத வேண்டியது வரும்.

2. சகாயம் அவர்களை தமிழகம் முழுக்க 32 மாவட்டத்திலும் நடைபெற்றுள்ள கனிமவள முறைகேடுகளை ஆய்வு செய்ய அனுமதிக்கும்படி, தமிழக அரசுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு அழுத்தமாக வலியுறுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி, அரசியல் இயக்கங்கள், சமூக இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்கும் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை ”கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம்” ஒரு வாரத்தில் ஒருங்கிணைத்து நடத்தும்.

3.சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, 25-11-2014 அன்று மதுரை மாவட்டத்தில் பெரிய அளவில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடுகளை பற்றி சகாயம் ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்துவிட்டு படிப்படியாக மற்றதை ஆய்வு செய்யலாம் என உத்திரவு இட்டு உள்ளதால், தமிழகத்தில் கனிமவள முறைகேடு நடந்து உள்ளதை பற்றி விபரம் தெரிந்தவர்கள் அனைவரும் சகாயம் ஆய்வுக்குழுவினரின் சென்னை முகவரிக்கு சனவரி-25 க்குள் தகவல் தெரிவிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். இந்த பெற்றுக் கொண்ட விபரங்களை சகாயம் ஆய்வுக்குழுவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தே ஆக வேண்டும். இதன் மூலம் சகாயம் ஆய்வுக் குழுவின் பணி தமிழகம் முழுவதும் உயர்நீதி மன்றத்தால் நீடிக்கப்படும் என நம்புகிறோம். மேலும் புகாரின் ஒரு நகலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

4.வேலூர் மாவட்டம் தோட்டாளத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் ஆற்றுமணல் குவாரியை எதிர்த்து மக்கள் கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர்,கடந்த ஒரு வாரமாக ஆற்றுமணல் குவாரியில் மணல் அள்ள வந்த 150 உழுவை இயந்திரங்களை பிடித்து வைத்து மக்கள் போராடி வந்தனர். நேற்று வேலூர் மாவட்ட கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த தோழர்.சிவலிங்கம் உட்பட பலரும் காவல்துறையால் தாக்கப்பட்டு கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சட்ட விரோதமாக நடைபெற்று வரும் ஆற்றுமணல் குவாரியை எதிர்த்து போரடியதற்காக கைது செய்யப்பட்ட…
*தோழர்.சிவலிங்கம் உட்பட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
*பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும்.
* சட்ட விரோதஆற்றுமணல் குவாரியை உடனே மூட வேண்டும்.

5.தமிழக மக்கள் சகாயம் ஆய்வுக் குழுவுக்கு, தமிழகத்தில் நடந்துள்ள கனிமவள முறைகேடு (தாதுமணல், ஆற்றுமணல்,கிரானைட் உட்பட…) பற்றிய தகவல்கள் தெரிவிப்பது உடன்
கனிமவள முறைகேடுகளால்…
– பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள்,
– உயிரிய பன்மயச்சூழல் பாதிப்புகள்,
– மக்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்புகள் (health impact study),
– குடிநீர் ஆதாரங்கள் அழிந்ததால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள்,
– விவசாயம் செய்யமுடியாததால், விளைச்சல் குறைந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள்
– கண்மாய், குளங்கள், நீர்வழி பாதைகள் அழிப்பால் ஏற்பட்ட இழப்புகள்,பாதிப்புகள்
– ஊர் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள்,
– மீன்பிடி தொழில் அழிவால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள், சமூக நெருக்கடிகள்
– மக்கள் ஊரிலிருந்து வெளியேறியதால் ஏற்பட்ட பாதிப்புகள்,
– தாதுமணல், ஆற்றுமணல்,கிரானைட் குவாரிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள்,
– இயற்கைக்கு (loss of eco system service) ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள்,
– மக்களைப் பிளவுபடுத்தி மோதவிட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள்,
– ஒவ்வொரு கிராமத்திலும் கனிமவள கொள்ளையர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள சமூகப் பாதிப்புகள் (social impact study) பற்றியும் எழுதியும்…

சகாயம் ஆய்வுக் குழு முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும் எனவும், ஒவ்வொன்றைப் பற்றியும் ஒவ்வொருவரும் அறிந்துள்ள விபரங்கள் பற்றியும் சகாயம் ஆய்வுக் குழுவுக்கு கடிதம் எழுதுங்கள்.
6. சகாயம் ஆய்வுக் குழுவிற்கு முறைகேடான குவாரிகள் பற்றிய விபரங்கள் கிடைக்க வைக்கவும், மற்ற பாதிப்புகள் பற்றி மக்கள் தெரிவிக்கவும் வாய்ப்புள்ள அனைத்து வடிவங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்வது, என முடிவு செய்யப்பட்டது.

7.சகாயம் ஆய்வுக் குழுவிற்கு உதவும் வகையில், ஒருங்கிணைப்பு குழு அமைக்காத மாவட்டங்களில் உடனடியாக ஒரு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

8..தமிழகம் முழுக்க பலரும் சகாயம் அவர்களின் நேர்மையான செயல்பாட்டின் மீது மதிப்பு வைத்து பல்வேறு பெயர்களில் முகநூல் பக்கம் வைத்து செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரையும் நேரடியாக அழைத்துப் பேசி சகாயம் ஆய்வுக் குழுப் பணிகளை விரிவாக முகநூல், இணையம் மூலம் மக்களிடம் எடுத்துச் செல்வதுடன், கனிமவள முறைகேடுகளைப் பற்றிய விவரங்களை பொதுமக்கள் சகாயம் ஆய்வுக் குழுவிற்கு தெரிவிக்கும் வகையில் முகநூல், இணையம் மூலம் தீவிர பிரச்சாரம் மேற்க்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க தமிழக ஒருங்கிணைப்பு குழுவினரும், காஞ்சிபுரம் மாவட்டம் தோழர்கள்.காஞ்சி.அமுதன், தமிழ் ஒளி, தமிழினியன்,ஸ்டாலின், தாண்டவமூர்த்தி, சங்கர், சீனிவாசன், கோவை மாவட்டம்,ஊழல் ஒழிப்பு இயக்கம் .துரை(ADSPஓய்வு), விவசாய சங்க தலைவர் கந்தசாமி, நாகர்கோவில் போஸ், தேனி ஈஸ்வரவடிவு லிங்கா லிங்கம், மதுவிலக்கு இயக்கம் அறிவுடமைநம்பி உட்பட சிறப்பு அழைப்பாளர்களும், தமிழகத்தில் உள்ள SIO மாணவர் இயக்கம் பொறுப்பாளர்கள் சையத் அபுதாகீர், பீர்முகம்மது, லயோலா கல்லூரி தோழர்.செம்பியன்,தோழர். ப்ரிட்டோ, தோழர்.பாரதிகண்ணன், தமிழக மாணவர் -இளையோர் கூட்டமைப்பு தோழர்.தமிழினியன், மாணவர் இணையம் தமிழ் நெறியன் உட்பட பல்வேறு மாணவ அமைப்பினரும்
பங்கு கொண்டனர்.

முகிலன்.
ஒருங்கிணைப்பாளர்,
கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம்,

Leave a Response