
அண்மைக்காலமாகத் தமிழகமெங்கும் வடநாட்டுத் தொழிலாளர்கள் அதிகரித்துவிட்டனர். குறைந்த கூலிக்கு வேலை செய்ய அவர்கள் தயாராக இருப்பதே இதற்குக்காரணம் என்று சொல்லப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் நிறைந்திருக்கும் அவர்களை அரசு நிறுவனங்களிலும் வேலைக்கு எடுக்கும் நிலை உருவாகியிருக்கின்றது. குறிப்பாகத் தமிழகத்தில் இயங்கும் நடுவணரசு நிறுவனங்களில் அவர்களை அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் சேர்ப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் தமிழகத்தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைப்பதில்லையாம்.
இந்தச் சிக்கலைப் பொதுத்தளத்தில் பேசி தமிழ்மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் தமிழ்த்தேசப் பேரியக்கம் இறங்கியிருக்கிறது.
இது தொடர்பாக அக்கட்சி விடுத்திருக்கும் அழைப்பு….
தமிழகத்தில் இயங்கும் நடுவண் அரசு நிறுவனங்கள் அனைத்திலும் பத்து விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, அந்த இடங்களில் தமிழர்களை 90 விழுக்காடு அளவிற்கு பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, வரும் திசம்பர் 12 அன்று சென்னை நடுவண் (சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில், “தொடர்வண்டி மறியல் போராட்டம்” நடைபெறுகின்றது.
இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில், தமிழகமெங்கும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் பரப்புரை இயக்கங்களும், தெருமுனைக் கூட்டங்களும் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நேற்று (29.11.2014) காரிக்கிழமை – காலை, சென்னை நடுவண் (சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையப் பகுதியிலும், இன்று (30.11.2014) மாலை வேளச்சேரி செக்போஸ்ட் நேரு நகர் பகுதியிலும், துண்டறிக்கைகள் வழங்கிப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை நடுவண்(சென்ட்ரல்) பகுதி பரப்புரைக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன் தலைமையேற்றார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் உள்ளிட்ட த.தே.பே. தோழர்கள், தொடர்வண்டி நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், புறநகர் தொடர்வண்டி நிலையத்திலும், தொடர்வண்டிகளிலும் பொது மக்களிடம், போராட்டத் துண்டறிக்கையை வழங்கி பரப்புரை மேற்கொண்டனர்.
சென்னை வேளச்சேரி பகுதி பரப்புரைக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வி.கோவேந்தன் தலைமையேற்றார். பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தோழர் இரா.இளங்குமரன், தோழர்கள் பிரகாசு பாரதி, நல்லன் சரன் கோ உள்ளிட்ட த.தே.பே. தோழர்கள், நேரு நகர் வீதிகளில் பொது மக்களிடம், போராட்டத் துண்டறிக்கையை வழங்கி பரப்புரை மேற்கொண்டனர்.
ஏமாந்தது போதும் தமிழர்களே! இளந்தலைமுறையின் எதிர்காலத்தை எண்ணுங்கள், எழுச்சி கொள்ளுங்கள்! போராடவாருங்கள்.


