சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் படம், ‘ரெமோ.’ இந்தப் படத்தை புது இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் முதன்முறையாக பெண் வேடம் ஒன்றிலும் நடிக்கிறார்.
இப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் கவிஞர் அறிவுமதி வரவேற்புரை நிகழ்த்தினார். தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் குத்துவிளக்கேற்றி 24 ஏஎம் நிறுவனத்தைத் தொடங்கிவைத்தார்.
இயக்குநர்கள் மோகன்ராஜா, பொன்ராம், ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதைத் தொடர்ந்து படத்தில் பணியாற்றிய ரசூல்பூக்குட்டி, கமலக்கண்ணன், ரூபன், அனுபார்த்தசாரதி உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பேசும்போது, நான் வளரும் கலைஞன், இந்தப்படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம், இந்தப்படம் நிச்சயவெற்றிப்படம் என்றார்.
இசையமைப்பாளர் அனிருத் பேசும்போது, சிவகார்த்தியனுடன் இது நான்காவது படம். அவருக்கு வேலை செய்யும்போது எனக்கு கூடுதல் சக்தி வந்துவிடும். இந்தப்படத்தின் பாடல்கள் சிறப்பாக அமைந்திருக்கின்றன என்றார்.
படத்தின் முதல்பார்வையை வெளியிட்டுப் பேசிய இயக்குநர் ஷங்கர், இவ்வளவு சிறப்பான நிகழ்ச்சியை இதுவரை நன் பார்த்ததில்லை, ரஜினி நடிக்கும் 2ஓ பாடல்வெளியீட்டு விழாவை எப்படி நடத்துவது என்கிற எண்ணத்துக்கு இங்கு விடை கிடைத்துவிட்டது. சிவகார்த்திகேயன், அனிருத், தயாரிப்பாளர் ராஜா ஆகியோருக்கு வாழ்த்துகள் என்றார்.
விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:-
‘‘ரெமோ படத்தின் கதை எனக்கு பிடித்தது. ஆனால் இதில் பெண் வேடம் போட்டு நடிப்பதுதான் சிரமமாக இருந்தது. இந்த வேடத்துக்காக 10 கிலோ எடை குறைத்தேன். தினமும் அதிகாலையில் 4 மணிநேரம் ‘மேக்கப்’ போட வேண்டி இருந்தது. புருவத்தில் இருந்த முடியை நீக்கினார்கள். வலித்தது. தலையில் கூந்தலை உருவாக்கி 50 ‘ஹேர்பின்’களை குத்தினார்கள்
பெண் வேடத்தில் வெளியே வருவதற்கும் தயக்கமாக இருந்தது. அந்த மேக்கப்பில் நடிக்க மிகவும் சிரமப்பட்டேன். படப்பிடிப்பை பார்க்க வந்த பலருக்கு பெண் வேடத்தில் இருப்பது நான்தான் என்று தெரியவில்லை.
விசாகப்பட்டினத்தில் நடித்துக்கொண்டு இருந்த போது படப்பிடிப்பை பார்க்க வந்தவர்கள் படக்குழுவினரிடம் என்னை பார்த்து கதாநாயகியின் பெயர் என்ன? என்று கேட்டு நச்சரித்தார்கள். மேக்கப் போட 3 மணி நேரம் என்றால் தினமும் மேக்கப்பை கலைப்பதற்கே 2 மணி நேரம் ஆனது.
நகைச்சுவை நடிகராக வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவுக்கு வந்தேன். எதிர்பாராத விதமாக கதாநாயகனாகி விட்டேன். இந்தப் படத்தை பினாமி மூலம் நான்தான் தயாரிக்கிறேன் என்று தகவல் பரவி உள்ளது. அதில் உண்மையில்லை. ஆர்.டி.ராஜாதான் தயாரிப்பாளர். அவருடைய எண்ணங்கள் பெரிது. படம் சம்பந்தமாகப் பல ஆச்சரியங்களை அமைதியாக நடத்திக்காட்டியவர். நான் பறப்பதற்கு ஆசைப்படுகிறேன் என்னை நடக்கச் சொல்லாதீர்கள் என்று வாட்ஸப்பில் வைத்திருக்கிறார். அவர் பல உயரங்களைத் தொடுவார். மோகன்ராஜா இயக்கத்தில் நான் நடிக்கும் அடுத்த படத்தையும் இவர்தான் தயாரிக்கிறார்.
இந்நிறுவனத்தில் என் நண்பர்கள் பலருக்கு நான் சொல்லாமலேயே வேலை கொடுத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியை இவ்வளவு பிரமாண்டமாக நடத்துவார் என்பதை நானே எதிர்பார்க்கவில்லை. இந்நிகழ்ச்சிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி, இந்நேரத்தில் என் மனைவிக்கும் நான் நன்றி சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.
மாலாமணியன் நன்றி சொன்னார். அஞ்சனா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.