
ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நவம்பர் 26 ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள்
கூட்டாக அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக ஐஎன்டியுசி, ஏஐசிடியுசி, எச்எம்எஸ், சிஐடியு,தொமுச உள்பட 10 தொழிற்சங்கங்கள் சார்பில்
வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது….
ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு அவற்றுக்குப் பதிலாக புதிதாக 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ஒன்றிய அரசு உருவாக்கி அவற்றை நவம்பர் 21 முதல் அமல்படுத்தியுள்ளது.
தொழிலாளர் விரோத, முதலாளிகளுக்கு ஆதரவான இந்தச் சட்டங்களை தன்னிச்சையாக நடைமுறைப் படுத்தியிருப்பதற்கு மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்
கொள்கிறோம்.
நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும் நவம்பர் 21 முதல் அமல்படுத்தப்படும் என ஜனநாயக விரோத,
தன்னிச்சையான அறிவிக்கை வெளியிட்டது, அனைத்து ஜனநாயக நெறிமுறைகளையும் மீறும் செயல். இது தொழிலாளர் நலன்களை முற்றிலும் சிதைத்துள்ளது.
ஏற்கெனவே உள்ள 29 தொழிலாளர் நலச்சட்டங்களை நீக்கிவிட்டு புதிதாக 4 தொழிலாளர் சட்டங்களை
இயற்றும்போது தொடக்க நிலையிலேயே தொழிற்சங்கங்களும், தொழிலாளர் நலக் கூட்டமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து 4 தொழிலாளர் சட்டத்தொகுப்புகளையும் ஒன்றிய அரசு திடீரென அமல்படுத்தியுள்ளது. இவை உழைக்கும் வர்க்கத்தினரின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானவை. இந்தச் சட்டத்தொகுப்புகளை தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களுக்கு எதிரான
இன ரீதியிலான தாக்குதலாகக் கருதுகிறோம்.
இவை தொழிலாளர்களை அடிமையாக்குவதுடன் அவர்களின் உரிமைகளை முற்றிலும் பறிக்கும். புதிய சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகள் சார்பில் நவம்பர் 26 ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிலாளர்கள் கறுப்புப் பட்டை அணிந்து பணியாற்ற வேண்டும். அதோடு வரும் திங்கட்கிழமை முதல் வாயிற்கூட்டம், தெருமுனைக் கூட்டம் என எதிர்ப்பு நடவடிக்கைப் பணிகளில் ஈடுபட வேண்டும். இந்த நான்கு சட்டத் தொகுப்புகள் திரும்பப் பெறப்படும்வரை உழைக்கும் மக்கள் வலிமையுடன் போராடுவார்கள் என்ற எச்சரிக்கையை ஒன்றிய அரசுக்கு விடுக்கிறோம்.
இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


