கலைஞர் வாழ்ந்தார் தமிழாக! அவரைப் போற்றுவோம் திமிராக!! – பிறந்தநாள் சிறப்பு

எழுத்தாளர், பேச்சாளர்,கவிஞர், திமுகழகத்தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியனவற்றோடு இலட்சோப இல்ட்சம் தொண்டர்களின் அன்பு உடன்பிறப்பு ஆகிய சிறப்புகளைப் பெற்றவர் கலைஞர் மு.கருணாநிதி. அவருடைய 102 ஆவது பிறந்தநாள் இன்று.

இந்நாளை செம்மொழி நாள் என்று அறிவித்து கொண்டாடி வருகிறது தமிழ்நாடு அரசு.

இந்நாளில் கலைஞர் புகழ்பாடும் கட்டுரை……

2004-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் நாள், காங்கிரசு ஆட்சிக் காலத்தில் இந்திய ஒன்றிய அரசால், தமிழ்மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டைப் பல்துறைகளிலும் முன்னேறச் செய்த திராவிடமுன்னேற்றக் கழகம்,தமிழ் மொழிக்காகச் செய்தவையும் ஏராளம்.

அவற்றில் சில..

நமது மாநிலத்துக்கு மொழியின் பெயரால் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியது, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.
தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுவி, அதனை மாநிலப் பாடல் ஆக்கியது கழக ஆட்சி.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளைப் பேரறிஞர் அண்ணா தலைமையில் தொடங்கி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரை நடத்தி, தமிழை உலகளவில் கொண்டு சென்றது.
அய்யன் வள்ளுவர் – அவ்வையார் முதலான பழங்காலத் தமிழ்ப் புலவர்கள் தொடங்கி, கால்டுவெல் – ஜி.யு.போப் போன்ற அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் வரை, திருவுருவச்சிலை நிறுவியதும் கழக ஆட்சியில் தான்.
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு சமூகநீதி வழியில் உயர்கல்வியில் இடஒதுக்கீடு தந்தது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான்.
வள்ளுவருக்குச் சென்னையில் கோட்டமும் – குமரியில் 133 அடியில் வானுயர்ந்த சிலையும் நிறுவி உலகமே அண்ணாந்து பார்க்க வைத்த ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகஆட்சி.
சுவடிகளில் இருந்து புத்தகங்களுக்குத் தமிழ் மாறியது போல், தமிழை இணையத்துக்குக் கொண்டு செல்ல 1999-லேயே தமிழ் இணைய மாநாடு நடத்தியதும், தமிழ் இணையக் கல்விக் கழகத்தை நிறுவி, இன்று உலகில் எங்கிருந்தாலும், தமிழ் இலக்கண – இலக்கியங்களை அனைவரும் படிக்கும் அளவிற்குத் தமிழை இணையப்படுத்தியதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான்.

பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் அடுத்தடுத்துச் செய்த அரும்பணிகளின் தொடர்ச்சியான பெரும்பணி தமிழ் செம்மொழி எனும் அறிவிப்பு.

தமிழ் தொன்மையான மொழி என்பதைத் தமிழர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. உலகம் முழுவதும் இருக்கும் மொழியியல் அறிஞர்கள், இனவியல் அறிஞர்கள் அதைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாபெரும் உண்மை இது.

தமிழ் – குறிப்பிட்ட நாட்டு மக்கள் பேசும் மொழியாக மட்டுமல்ல, ஒரு பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறது நம்முடைய தமிழ் மொழியானது. நிலத்துக்கு, மண்ணுக்கு, இயற்கைக்கு, மக்களுக்கு, பண்பாட்டுக்கு இலக்கணத்தை வகுத்திருக்கக்கூடிய மொழி!

தமிழைப் பேசும் போது இனிமையாக இருக்கிறது. தமிழைக் கேட்கும்போது இனிமையாக இருக்கிறது. ஏன், ‘தமிழ்’ என்று சொல்லும்போதே இனிமையாக இருக்கிறது.தமிழ் என்றாலே இனிமை என்றுதான் பொருள்! ‘இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்’ என்று பிங்கலநிகண்டும் கூறுகிறது!

தமிழ், உலகின் மூத்த மொழிகளில் ஒன்று! தமிழ், எந்த மொழியில் இருந்தும் கடன் வாங்கி உருவான கிளை மொழி அல்ல. தமிழில் இருந்துதான் ஏராளமான மொழிகள் உருவாகியுள்ளன.இலக்கியச் செழுமையும் இலக்கண அறிவும் கொண்ட மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் அறிஞர்கள் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தது.

அது பார்ப்பனீய அரசுகளின் இரும்புக்காதுகளுக்கு எட்டாமல் இருந்து வந்தது.இரும்பை உடைத்து கரும்பு போன்ற அந்தக் கனவை நிறைவேற்றி வைத்தவர் தான் முத்தமிழறிஞர் கலைஞர்.

அறம் பெருகும் தமிழ் படித்தால்

அகத்தில் ஒளி பெருகும்

திறம் பெருகும் உரம் பெருகும்

தீமைக் கெதிர் நிற்கும்

மறம் பெருகும் ஆண்மை வரும்

மருள் விலகிப் போகும்

புறம் பெயரும் பொய்மை யெலாம்

புதுமை பெறும் வாழ்வே

என்று பாடினார் பாவலேறு பெருஞ்சித்திரனார்.

இப்பாடலின் ஒவ்வொரு எழுத்துக்கும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

அடித்தட்டுக் குடும்பத்தில் பிறந்து தன் தமிழ்த் திறன்களையே படிக்கட்டுகளாக்கி தமிழ்நாட்டின் முதலமைச்சாய் ஆனது மட்டுமின்றி தமிழ் மக்கள் உள்ளங்களிலெல்லாம் தமிழென்றால் நினைவு வரும் முதற்பெயராய் இருப்பவர் கலைஞர்.

அவர் பிறந்து நூறாண்டுகள் ஆகிவிட்டன.இவற்றில் முக்கால் நூற்றாண்டு அவர் இல்லாமல் தமிழ்நாட்டு அரசியல் இல்லை.அரை நூற்றாண்டாக அவர் இல்லாமல் இந்திய ஒன்றிய அரசியலும் இல்லை என்கிற வரலாற்றைப் படைத்த மாமனிதர்.

அண்டமெங்கும் அதிசயத்துப் பார்க்கும் இவ்வளவு பெரிய அசுர வளர்ச்சிக்கு அவர் துணையாகப் பற்றிக் கொண்டது தமிழை மட்டுமே. தமிழ் பயின்றார் பயிற்றுவித்தார் தன்னரண் தமிழுக்குத் தான் அரண் எனும் நிலைக்கு உயர்ந்தார்.

உலகின் மூத்த மொழி உயர்தனிச் செம்மொழி மாந்த நேயம் காத்த மொழி மனித குலத்திற் சிறந்த மொழி என்கிற பெருமையையெல்லாம் பெற்றிருக்கும் தமிழுக்கு அறிவியல் ஒளியில் ஒன்றாயிருந்த பூமி எல்லைகள் வகுத்து நாடுகள் பிரிந்து பல மொழிகள் பிறந்து அயர வைக்கும் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் இருந்த இடம் குறைவென்று கருதி அதை ஈடுகட்ட அதுவரை ஏடுகளிலும் மக்கள் உள்ளங்களிலுமிருந்த பெருமையை ஓர் அரசாங்கத்தால் அறிவிக்க வைத்தவர் கலைஞர்.

தமிழுக்கும் தமிழருக்கும் எந்நாளும் எதிர்நிற்கும் இந்திய ஒன்றிய பார்ப்பனிய மனநிலையை உடைத்து அதன் மூலமே உயர்தனிச் செம்மொழி என்று அறிவிக்க வைத்தார் கலைஞர்.

கலைஞருடைய வாழ்நாள் பெருமைகள் பல அவற்றின் மகுடம் இது.

தந்தையைப் போல் தமிழுக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் உணர்வோடு பயணிக்கும் அவர் தனயன் தமிழ்ச் சமுதாயத்தின் தலைவன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், கலைஞர் பிறந்த நாளைச் செம்மொழி நாளாகக் கொண்டாடுவோம் என்று அறிவித்திருக்கிறார்.

இவ்வாண்டு முதல் அது தமிழ்நாடு அரசாங்கத்தால் கொண்டாடப்படும் நிகழ்வாகியிருக்கிறது.

நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது பழங்கூற்று. அதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு கலைஞர்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதே அவர் சிந்தையில் இருந்தது.அதன் விளைவு, இப்போது செம்மொழி என்றால் கலைஞர் என்கிற நிலை உண்டாகிவிட்டது.

கலைஞரின் செம்மொழி ஏடும் இதை வழிமொழிந்து அவரை வணங்கி நிற்கிறது.

கலைஞர் வாழ்ந்தார் தமிழாக!
அவரைப் போற்றுவோம் திமிராக!!

– மோகன்

Leave a Response