18 ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பப்பட்ட இந்தியா கூட்டணியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அக்கூட்டணி 234 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி 292 இடங்களைப் பிடித்தது.அதனால் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது.
இந்நிலையில், தோற்ற காங்கிரசுக் கட்சி ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறது? ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்?” என்பது புரியவில்லை என்று பேசினார் பிரதமர் மோடி.
தோற்றாலும் மகிழ்ச்சியாக இருப்பதன் காரணம் இவைதான்…
இந்தத் தேர்தலில், 370 இடங்களைக் கைப்பற்றி இந்திய ஜனநாயகக் கட்டமைப்பை நாசப்படுத்த நினைத்திருந்தார் மோடி.
400 கிடைத்தால் தான் நாம் நினைத்ததைச் செய்ய முடியும்’ என்று முழங்கினார் மோடி. ஒரே நாடு -–- ஒரே தேர்தல் என்று சொல்லி சர்வாதிகாரத் தன்மை கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க நினைத்தார். அவரையே, இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை வைத்து வணங்க வைத்து விட்டார்கள் அல்லவா?
‘பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவோம்’ என்று பா.ஜ.க. எம்.பி. இந்தத் தேர்தலில் பரப்புரை செய்தார். “400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி ஏன் சொல்கிறார் என்றால், அரசியலமைப்புச் சட்டத்தை நாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான்” என்று பா.ஜ.க. எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான அனந்த குமார் சொன்னார்.
‘இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணம்” என்று தமிழ்நாட்டு ஆளுநர் ரவியும் அவ்வப்போது சொல்லிக் கொண்டு இருந்தார். இப்போது, சந்திரபாபு, நிதிஷ்குமார் தயவில் ஆளும் மோடியால் இனி இது எதையும் செய்ய முடியாது.
‘நானே ஆக்கவும் அழிக்கவும் வல்லவன்’ என்ற பெயரால் ‘மோடி கேரண்டி’ கொடுத்துக் கொண்டு இருந்தாரே மோடி, அவர் இப்போது கூட்டாட்சியைப் பற்றியும் கூட்டணி ஆட்சியைப் பற்றியும் பேசத் தொடங்கி இருக்கிறார். மோடி, மோடி என்று பேசிக் கொண்டிருந்தவர், ‘கூட்டணி, கூட்டணி’ என்று பேசுகிறார். இப்போதெல்லாம் ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என்று பேசத் தொடங்கி இருக்கிறார். பா.ஜ.க. அரசு என்று கூடச் சொல்வது இல்லை.
“மக்களவைத் தேர்தலில் அடைந்த வெற்றிக்காக தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி. ஏற்கனவே மூன்று முறை முழுமையாக ஆட்சி நடத்தி உள்ள இக்கூட்டணி 4 ஆவது பதவிக் காலத்தில் நுழைகிறது என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பற்றியே பேசி தனது பலவீனத்தை பலமாக மாற்ற முனைந்துள்ளார் மோடி.
இதுவரை தான் வைத்ததே சட்டம் என செயல்பட்டு வந்தார் மோடி. முதல் தடவையாக கருத்தொற்றுமை பற்றி அவர் பேசி இருக்கிறார். ‘ஆட்சி அமைக்க பெரும்பான்மை தேவை. அதேநேரம், அரசை நடத்த கருத்தொற்றுமை அவசியம். மத்தியில் அரசை நடத்தும் வாய்ப்பை எங்களுக்கு மீண்டும் வழங்கி உள்ளனர். எனவே அரசை நடத்துவதில் கருத்தொற்றுமையை உறுதி செய்ய தொடர்ந்து பணியாற்றுவேன்’ என்று சொல்லி தன்முனைப்பில் இருந்து கூட்டுப் பொறுப்புக்கு இறங்கி வந்துள்ளார் மோடி.
இசுலாமியர்களை முடிந்தவரை இழிவுபடுத்திப் பேசினார் மோடி. இப்போது அப்படியே பல்டி அடித்துவிட்டார். ‘அனைத்து மதத்தினரும் சமம் என்ற அரசமைப்புச் சட்டத்தின் கொள்கைக்காக நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்’ என்று இப்போது பேசி இருக்கிறார் மோடி.
* பொதுசிவில் சட்டம் கொண்டு வருவோம்.
* ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வருவோம்
ஆகியவை பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையின் இரண்டு முக்கியமான கொள்கை பிரகடனங்கள்.ஆனால் மூன்றாவது முறை ஆட்சியமைத்தும் அதைப் பற்றியே மோடி பேசவில்லை.பேசவும் முடியாது.
மோடி ஜெயித்தாலும் நாடு காப்பாற்றப்பட்டது என்பதால் இந்தியா கூட்டணியினர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.