நடப்பு ஐபிஎல் மட்டைப்பந்துப் போட்டித் தொடரின் 13 ஆவது தகுதிச்சுற்று போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ஓட்டங்களில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது டெல்லி அணி.
192 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரட்டியது.அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணைந்து ஆட்டத்தைத் தொடங்கினர்.
ருதுராஜ் 1 ஓட்டத்திலும், ரச்சின் 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதில் 12 பந்துகளை எதிர்கொண்டிருந்தார் ரச்சின். அவர்கள் இருவரையும் கலீல் அகமது ஆட்டமிழக்கச் செய்தார்.
தொடர்ந்து ரஹானே மற்றும் மிட்செல் இணைந்து நிதானமாக ஆடினர். இருவரும் 3 ஆவது விக்கெட்டுக்கு 68 ஓட்டங்கள் எடுத்தனர். மிட்செல் 34 ஓட்டங்களும், ரஹானே 45 ஓட்டங்களும் எடுத்தனர். சமீர் ரிஸ்வி, ஓட்டம் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். துபே, 18 ஓட்டங்களில் வெளியேறினார்.
தொடர்ந்து தோனி, களத்துக்கு வந்தார். இந்த சீசனில் முதல் முறையாக அவர் மட்டைபிடித்து வந்திருந்த காரணத்தால் மைதானத்தில் போட்டியைப் பார்த்த பார்வையாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் எதிர்கொண்ட முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.
சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 41 ஓட்டங்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரில் 20 ஓட்டங்கள் மட்டுமே சென்னை அணி எடுத்தது. தோனி, 16 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்தார். 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் இதில் அடங்கும். ஜடேஜா, 21 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
20 ஓவர்களில் 6 வீரர்களை இழந்து 171 ஓட்டங்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதன் மூலம் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி.
இந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தாலும் அந்தத் தோல்வி சென்னை அணி இரசிகர்களைச் சிறிதும் பாதிக்கவில்லை. அதற்குக் காரணம், இந்தப் போட்டியின் கடைசியில் தோனி களமிறங்கியதும் 16 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்ததையும் கொண்டாடிவருகின்றனர்.