காந்தி மண்ணில் மதுவுக்கு அனுமதி – பாஜக முடிவுக்குக் கண்டனம்

குஜராத் மாநிலத்தில் தான் தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்தார். காந்தி பிறந்த மண் என்பதால் குஜராத்தில் மதுபானம் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை, அருந்துவது ஆகியவை தடை செய்யப்பட்டு உள்ளன.

குஜராத்தில் தற்போது பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள காந்தி நகர் மாவட்டத்தில் இன்டர்நேஷனல் பைனான்சியல் டெக் சிட்டி(கிஃப்ட்)யில் விரைவில் 3 நாள் குஜராத் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சர்வதேச நிதி நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் காந்தியின் பெயரில் அமைந்துள்ள காந்தி நகர் மாவட்டம் கிப்ட் சிட்டியில் மட்டும் மதுபானம் மீதான தடையை அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது. கிப்ட் சிட்டியில் உள்ள நிறுவன உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விருந்தினர்களுக்கு மதுபானம் அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குஜராத் அரசின் இந்த முடிவுக்கு காங்கிரசுக் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுவரை மதுபானம் இல்லாத மாநிலமாக இருந்த இடத்திலும் மதுபானத்தை அனுமதித்து மக்களுக்குத் தீங்கு செய்வதுடன் மகாத்மாகாந்தியின் மதிப்பையும் கெடுக்கத் துணிந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

Leave a Response