ஆம் ஆத்மி அரசின் முடிவு – பிரபல பாடகர் படுகொலை பஞ்சாப்பில் பதட்டம்

பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாப் பாடகர் சித்து மூஸ்சேவாலா. காங்கிரசுக் கட்சியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இணைந்தார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், மான்சா தொகுதியில் போட்டியிட்ட இவர், ஆம் ஆத்மி வேட்பாளர் விஜய் சிங்லாவிடம் 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

இம்மாநிலத்தில் சில மாதங்களுக்கு முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், இம்மாநிலத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பைத் திரும்பப் பெற்று வருகிறது. நேற்று முன்தினம் 420 பேரின் பாதுகாப்பைத் திரும்பப் பெறுவதற்கான உத்தரவை முதல்வர் பகவந்த் மான் பிறப்பித்தார். இதனால், மூஸ்சேவாலாவின் பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டது.

இந்நிலையில், மான்சா மாவட்டத்தில் நேற்று மகிழுந்தில் சென்று கொண்டிருந்தபோது மூஸ்வாலாவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரும், அவருடன் இருந்த 2 பேரும் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தனர். காவல்துறையினர் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே மூஸ்சேவாலா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்ட மறுநாளே, பட்டப் பகலில் மூஸ்சேவாலா சுட்டுக் கொல்லப்பட்டது பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூஸ்சேவாலாவின் இயற்பெயர் சுப்தீப் சிங் சித்து. 1993 ஆம் ஆண்டு மூஸ்சேவாலா என்ற ஊரில் பிறந்த இவருக்கு இலட்சக்கணக்கான இரசிகர்கள் உள்ளனர்.

மூஸ்சேவாலாவின் படுகொலைக்கு காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி, முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Response