பணவீக்கம் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு மோடி ஆழ்ந்த மெளனம் – சோனியாகாந்தி விளாசல்

இராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரசுக் கட்சியின் 3 நாள் ‘‘சிந்தனைக் கூட்டம்’’ நேற்று தொடங்கியது. கட்சித் தலைவர் சோனியா காந்தி, இராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உட்பட சுமார் 400 மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டின் தொடக்க விழாவில் காங்கிரசு தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:….

காங்கிரசுக் கட்சியால் நாம் பலன் அடைந்துள்ளோம். அந்த வகையில் கட்சிக்கு அனைவரும் கடன்பட்டுள்ளோம். இப்போது கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. கட்சியின் மூத்த தலைவர்கள் தங்கள் சுயவிருப்பங்களைப் புறந்தள்ளி கட்சியின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

காலத்துக்கு ஏற்ப கட்சியில் உடனடி மாற்றங்கள் தேவை. கட்சியின் உள்கட்டமைப்பில், அன்றாடச் செயல்பாடுகளில் மாற்றங்களை அமல் செய்ய வேண்டும். கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் கட்சியை வலுப்படுத்த முடியும்.

பாஜக ஆட்சியில் பதற்றமும் பயமும் அதிகரித்து வருகிறது. மதத்தின் பெயரால் மக்களிடையே பிரிவினை தூண்டப்படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற நாட்டின் உயரிய கலாச்சாரம் அழிக்கப்படுகிறது. நாட்டின் ஓர் அங்கமான சிறுபான்மையினர் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர்.

பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இதைப் பற்றிக் கவலைப்படாமல் நாட்டின் அமைதியை பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் சீர்குலைத்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த மவுனம் காக்கிறார்.

எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்படுகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் ஏவி விடப்படுகின்றன. தேசத்தந்தை மகாத்மா காந்தியைக் கொலை செய்தவர்களை பாஜக பாராட்டுகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டின் ஒற்றுமையைக் காப்பாற்ற வேண்டும். இதற்கு காங்கிரசு தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டும்.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

Leave a Response