அதிர்ச்சியளித்த ஆளுநர் திருப்பியடித்த மு.க.ஸ்டாலின்

இந்திய ஒன்றியம் முழுவதும் மருத்துவக் கல்வியில் சேருவதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த நீட் தேர்வு, மத்திய அரசின் கல்வித் திட்டத்தின்படி கொண்டு வரப்பட்டதால், மாநிலக் கல்வியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத நிலை இருந்தது. மாநிலத்தில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கூட நீட் தேர்வில் தோல்வியடையும் நிலை உருவானது. இதனால் நீட் தேர்வை இரத்து செய்யக்கோரி தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன.

தமிழகத்தில் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, நவம்பர் 23 ஆம் தேதி நீட் தேர்வு அமல்படுத்தப்படுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.

இந்த நீட் தேர்வில் தோல்வியடைந்த 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.

இந்தநிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி புதிய சட்ட மசோதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு,ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனாலும், தமிழக ஆளுநர் இந்த சட்ட மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து, தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, குடியரசுத்தலைவருக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து டெல்லியில் திமுக எம்பிக்கள் குடியரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்று மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து தமிழகத்தின் அனைத்துக் கட்சி எம்பிக்களும் குழுவாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினர்.

ஆனாலும், தமிழக ஆளுநர் தொடர்ந்து காலதாமதப்படுத்தி வந்தார். இதனால், ஜனவரி 31 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரை நிகழ்த்தும்போது, நீட் பிரச்னையை டி.ஆர்.பாலு எழுப்பினார். இதனால் பரபரப்பு எழுந்தது. நேற்று முன்தினம் பட்ஜெட் விவாதத்தின்போது காங்கிரசு தலைவர் இராகுல்காந்தி, நீட் விவகாரத்தை கையில் எடுத்து கண்டனம் தெரிவித்துப் பேசினார்.

இந்த நிலையில் தமிழக அரசுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 1 ஆம் தேதி கடிதம் எழுதியதாக நேற்று பத்திரிகைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதற்காக தமிழக அரசு சார்பில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அரசுக்கு அளித்த அறிக்கையின் அடிப்படையில், 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சமூகநீதி அடிப்படையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மசோதா, கிராமப்புற ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலனுக்கு எதிரானது. வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சமூகநீதி முழுவதுமாக ஆய்வு செய்யப்பட்டு ஏழை மாணவர்களின் பொருளாதார நிலை சுரண்டப்படுகிறது என்றும், அதனால் நீட் தேர்வு செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நீட் சட்ட மசோதா சட்டப்பேரவையின் மறுபரிசீலனைக்காக சபாநாயகருக்கு திரும்ப அனுப்பப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 4 மாதமாக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், திடீரென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு குறித்த சட்ட மசோதாவை திருப்பி அனுப்பி வைத்தது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஆளுநரின் இந்த முடிவுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்புகள், மாணவர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆளுநரின் இம்முடிவுக்கு தமிழக அரசு உடனடியாக எதிர்வினை ஆற்றியுள்ளது. அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்றிட, ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது.

இந்தச் சட்டமுன்வடிவை மாண்புமிகு ஆளுநர் அவர்கள், ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்காத நிலையில், இதனை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

இருப்பினும், இந்தச் சட்டமுன்வடிவு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படாத நிலையில், அந்தச் சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாண்புமிகு ஆளுநர் அவர்கள் 1-2-2022 அன்று மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களுக்குத் திருப்பி அனுப்பி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் நீட் விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவானது, கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானதாக இருப்பதாகவும், கிறித்தவ மருத்துவக் கல்லூரி வழக்கில் நீட் தேர்வை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், சமூகநீதியைப் பாதுகாப்பதாகவும், ஏழை மாணவர்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதாகவும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்டமுன்வடிவைத் திருப்பி அனுப்புவதற்கான கோப்பு, மாண்புமிகு ஆளுநர் அவர்களால் 1-2-2022 அன்று கையெழுத்திடப்பட்டு, 2-2-2022 அன்று மாலை தமிழ்நாடு அரசால் பெறப்பட்டது. உடனடியாக மாண்புமிகு ஆளுநர் அவர்களின் கடிதம் மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களுக்கு இன்று அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வானது ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானதாகவும், பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது என்பதிலும், இத்தேர்வின் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை முறை சமூகநீதிக்கு எதிரானதாக உள்ளது என்பதிலும் தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சியினர், சமூக சிந்தனையாளர்கள் என அனைவரிடமும் அசைக்கமுடியாத கருத்தொற்றுமை நிலவி வருகிறது.

இதனடிப்படையில்தான், இந்த நீட் தேர்வு முறை நமது மாணவர்களை பாதித்துள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து, அவ்வாறு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அவற்றைக் களையக் கூடிய வகையில் சரியான மாற்று மருத்துவ மாணவர் சேர்க்கை முறை குறித்து பரிந்துரைப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் திரு ஏ.கே. இராஜன் அவர்களின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே நீட் தேர்வு முறையில் இருந்து விலக்கு கோரும் சட்டமுன்வடிவு நமது சட்டமன்றத்தில் 13-9-2021 அன்று நிறைவேற்றப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நீட் விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவு கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்றும், நீதியரசர் ஏ.கே. ராஜன் குழு தெரிவித்துள்ள, இச்சட்டத்திற்கு அடிப்படையான கூற்றுகள் தவறானவை என்றும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள், தமிழ்நாட்டு மக்களால் ஏற்கத்தக்கவை அல்ல.

எனவே, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து, நீட் தேர்வு பற்றிய உண்மை நிலையைத் தெளிவாக விளக்குவதோடு, இந்தச் சட்டமுன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு முன்னெடுக்கும்.

இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட, 5-2-2022 அன்று காலை 11-00 மணி அளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட இந்த அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இச்சட்டமுன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இரண்டாவது முறை ஒரு சட்டமுன்வடிவை அனுப்பினால் அதை ஆளுநர் ஏற்றே ஆகவேண்டும் என்பது அரசியல்சட்டம்.

தமிழக அரசுக்கு அதிர்ச்சியளித்த ஆளுநருக்கு உடனடியாக எதிர்வினை ஆற்றி திருப்பியடித்திருக்கும் மு.க.ஸ்டாலினின் முயற்சிக்கு தமிழக மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

Leave a Response