முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் 13 மணி நேரம் சோதனை – சிக்கியவை குறித்த விவரங்கள்

தமிழகத்தில் 2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து எதிர்க்கட்சியாக இருந்த திமுக சார்பில் தமிழக ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பிறகு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட ஊழல் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர்களின் ஊழல் ஆதாரங்களின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி, வீரமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் பதியப்பட்டன. அவர்களது பண்ணை வீடுகள், நட்சத்திர ஓட்டல்கள், குவாரிகள் என 100க்கும் மேற்பட்ட இடங்களில் இலஞ்சஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது, ஏராள பணம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி நகைகள், வங்கி முதலீடுகள், சொத்து, காப்பீடு நிறுவனங்களில் முதலீடு உள்பட ஏராளமான ஆவணங்கள் சிக்கின.இதேபோல், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மாநில தலைவருமான சேலம் இளங்கோவன், தனது பதவிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது தொடர்பாக 40க்கும் மேற்பட்ட இடங்களில் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி, பல கோடி ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களைக் கைப்பற்றினர்.

மேலும் 2021 டிசம்பர் 15 ஆம் தேதி அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டச் செயலாளரும், முன்னாள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான தங்கமணி தொடர்புடைய 69 இடங்களில் சோதனை நடத்தினர். அதில் கிரிப்டோகரன்சியில் அவர் முதலீடு செய்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி.அன்பழகன், தனது பதவிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 11 கோடியே 32 இலட்சத்து 95 ஆயிரத்து 755 சொத்து குவித்ததாக தொடர் புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்து முறைகேடு குறித்து தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியது.

அதில், அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்த முன்னாள் அமைச்சர்
கே.பி.அன்பழகன்(62), தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது அவரது மனைவி மல்லிகா(55), மகன்கள் சசிமோகன்(29), சந்திரமோகன்(32), மருமகள் வைஷ்ணவி(32) ஆகியோர் பெயரில் சொத்துகள் வாங்கிக் குவித்ததும், பினாமிகள் பெயரில் சொத்துகள் வாங்கியதும், பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததும் தெரியவந்தது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தனது வருமானத்தை மீறி 11.32 கோடி சொத்துக்கள் சேர்த்தது தெரியவந்தது.

பின்னர் தர்மபுரி மாவட்ட இலஞ்ச ஒழிப்புத்துறையினர், முன்னாள் அமைச்சர் அன்பழகன்(62), அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்குச் சொந்தமான வீடு, அலுவலகம், உறவினர்கள், பினாமிகளுக்கு சொந்தமான தர்மபுரி, சேலம், சென்னை மற்றும் தெலங்கானா மாநிலம் என 58 இடங்களில் நேற்று காலை ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட இலஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

குறிப்பாக தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்துள்ள கெரகோடஅள்ளியில் அன்பழகனுக்குச் சொந்தமான பிரமாண்ட பங்களாவில் தர்மபுரி இலஞ்சஒழிப்பு டிஎஸ்பி (பொறுப்பு) ஜெய்குமார் தலைமையில் வந்து சோதனையில் ஈடுபட்டனர். வீட்டிலிருந்த அன்பழகன், மனைவி, மகன்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி, பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இதேபோல் அன்பழகன் வீட்டருகே வசிக்கும் அவரது உறவினர் சண்முகம், சித்தப்பா கோவிந்தன், பால் சொசைட்டி நடத்தும் சந்திரசேகர் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தினர். மேலும், தர்மபுரி மாவட்டம் பூலப்பட்டியில் உள்ள அன்பழகன் மகள் வித்யா வீடு, பெரியாம்பட்டியில் உள்ள கிரஷர், பொன்னேரியில் உள்ள குவாரி, அன்னசாகரத்தில் உள்ள தர்மபுரி நகர அதிமுக செயலாளர் பூக்கடை ரவி வீடு, தாளம்பள்ளத்தில் உள்ள மாநில விவசாய அணித்தலைவர் அன்பழகன் வீடு, நல்லம்பள்ளியில் உள்ள அன்பழகன் மனைவியின் தம்பிக்கு சொந்தமான குவாரி, பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் பாஸ்கர் வீடு, அன்பழகன் மாமனார் அப்பனகவுண்டர், மைத்துனர் செந்தில் வீடு, தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், கேபி அன்பழகனுடன் நெருக்கமாக இருந்த தர்மபுரி தாசில்தார் ராஜராஜன் வீடு உள்பட தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 53 இடங்களில் சோதனை நடந்தது.

இதேபோல், சேலம் இரும்பாலை ராசிநகரில் உள்ள அன்பழகனின் ஆதரவாளரான ஜெயபால் என்பவருக்குச் சொந்தமான சொகுசு பங்களாவிலும் சோதனை நடந்தது. டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையில் நடந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கின.ஜெயபால் தற்போது கரூர் மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குநராக உள்ளார்.

அதைத் தொடர்ந்து சென்னையில் கே.பி.அன்பழகனுக்குச் சொந்தமான வீடு, நிறுவனங்கள் மற்றும் மருமகள் வைஷ்ணவியின் உறவினர் வீடு, நிறுவனங்கள் என 3 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அன்பழகனின் நிறுவனம்,கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கணேஷ் கிரானைட், நுங்கம்பாக்கம் கதீட்ரல் கார்டன் லைனில் உள்ள வைஷ்ணவியின் உறவினரான என்.சிவகுமார் பெயரில் உள்ள வீடு, அடையாறு காந்தி நகரில் என்.சிவகுமார், நீலாங்கரை ரூபி காம்ப்ளக்ஸ் சாலையில் உள்ள வீடு ஆகியவற்றில் சோதனை நடந்தது.

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான குறிப்பாக அவரது சொந்த மாவட்டமான தர்மபுரி மாவட்டத்தில் 53 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடம், சென்னையில் 3 இடம், தெலங்கானா மாநிலத்தில் ஒரு இடம் என 58 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

13 மணி நேரம் நடந்த இந்த சோதனை முடிவில் 2 கோடியே 87 இலட்சத்து 98 ஆயிரத்து 650 ரூபாய் ரொக்கப் பணம், 6 கிலோ 637 கிராம் தங்க நகைகள் மற்றும் கட்டிகள், 13 கிலோ 85 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தில் 22 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கு மட்டும் கணக்குக் காட்டப்பட்டது. மீதமுள்ள 2 கோடியே 65 இலட்சத்து 31 ஆயிரத்து 650 ரூபாய்க்கு கணக்குக் காட்டவில்லை. இதனால் கணக்கில் வராத 2.65 கோடி பணத்தை இலஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், வங்கி பெட்டக சாவி மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Response