கோவை சுந்தராபுரம் ஃபிம்ஸ் மருத்துவமனையில் உடல் உறுப்புத் திருட்டு – நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீனா. இவரது தாய்க்குக் கடந்த ஏப்ரல் மாதம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை சுந்தராபுரத்தில் உள்ள ஃபிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளனர்.

பின்னர் அவருக்கு மே மாதம் வரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு நாளும் சிகிச்சைக்காக ரூ.70 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அவரை மே மாதம் கிணத்துக்கடவு அருகே உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இவருடன் சில நோயாளிகளும் அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து அடுத்த நாளிலேயே பிரவீனாவின் தாய் உயிரிழந்துள்ளார். இதையடுத்து பிரவீனாவிடம் இந்த மருத்துவமனையில் உடல் உறுப்புகள் திருடப்படுவதாகவும், இதனால் தான் உங்கள் தாய் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிரவீனா மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்,போத்தனூர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், “உடல் உறுப்புகளைத் திருடும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஆனால், காவல்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால்,சனவரி 7 ஆம் தேதியன்று,

1.மர்ம தேசமான ஃபிம்ஸ் மருத்துவமனை மீது இதுவரை வந்த புகார்களின் அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்!

2.சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

3.ஃபிம்ஸ் மருத்துவமனையை உடனடியாக இழுத்து மூட வேண்டும்! அங்குள்ள நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்ற வேண்டும்!

4.மருத்துவமனைக்காக அடியாள் வேலை பார்த்த போத்தனூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் முருகேஷ் ஐ உடனடியாக பணி நீக்கம் செய்யவேண்டும்

5.மருத்துவமனை மோசடிகளுக்குத் துணை போன காவல் அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இளைஞர் அரண் வழக்கறிஞர் சுதா காந்தி தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு,மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் மேலும் பல முற்போக்கு இயக்கத்தினரும், பாதிக்கப்பட்ட மற்றும் இறந்து போனவர்களின் உறவினர்களான பிராவீனா, நதியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிறப்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் தொடங்கும் முன்னர், ஹென்றி திபேன் தலைமையில் பாதிக்கப்பட்ட பிரவீனா ஆகியோர் கோவை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.

Leave a Response