திமுக அரசு முடிவு – சீமான் வரவேற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் சரணாலயம், பருவநிலை மாறுபாட்டிற்கேற்ப பல்வேறு நாடுகளிலிருந்து பறவைகள் வந்து தங்கிச் செல்லும் இடமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. பாதுகாக்கப்பட்ட சூழல் மிகுந்த பகுதியாக அறிவிக்கப்பட்ட இடம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்.

இந்நிலையில் தனியார் மருந்து நிறுவனம் ஒன்றின் விரிவாக்கத்திற்காக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை 5 கி.மீ. ரேடியஸ் சுற்றளவில் இருந்து 3 கி.மீ. சுற்றளவாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக 2020 இல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு அறிவித்தது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தனியார் நிறுவனத்துக்கு அரசு உதவவில்லை என வனத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பறவைகள் சரணாலயப் பரப்பளவைக் குறைக்கும் முடிவு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

இதற்கு நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை வரவேற்பு தெரிவித்துள்ளது. அதன் ட்விட்டர் பக்கத்தில்…

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் எல்லைகளைக் குறைத்து சன் பார்மா நிறுவனத்தின் விரிவாக்கத்தினை எதிர்த்துக் கடந்த ஆண்டு (2020) நாம் தமிழர் கட்சி வழக்குத் தொடர்ந்து வெற்றிகண்ட நிலையில், தற்போது வனத்துறை சார்பில் எல்லைக் குறைப்பு முன்மொழிவு திரும்பப்பெறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நன்றி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response