விடுதலைப்புலிகளின் போராட்டத்தை ஐ.நா மன்ற மனித உரிமைகள் சாசனம் ஆதரிக்கிறது- வைகோ பேச்சு


மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத் தலைநகர் ஜார்ஜ் டவுனில் ‘‘இலங்கையில் மனித உரிமை மீறல்கள்’’ குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசியதாவது:-

ஈழத்தமிழர்கள் தாம் இலங்கை மண்ணின் பூர்வ குடி மக்கள். அவர்கள் தங்கள் தாயகத்தின் உரிமைக்காக, தமிழ் ஈழத்திற்காக, தன்னாட்சிக்காகப் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஐ.நா.மனித உரிமைகள் ஆவணம் வரையறுத்து இருக்கின்ற கோட்பாடுகளின்படித்தான் அவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இந்தக் கருத்தை அப்படியே உள் வாங்கிக் கொண்டு ஐ.நா.மன்றம் பொதுப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது.

மனித உரிமைகளை ஆயிரம் அடி ஆழத்தில் குழிதோண்டிப் புதைக்கின்ற வகையில் இலங்கை அரசு மேற்கொண்டு வந்த அடக்குமுறைகள், படுகொலைகளின் விளைவாகத்தான், தமிழ் ஈழத்தின் இளைய தலைமுறை, குறிப்பாக பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்டத்தைக் கையில் எடுத்தனர். அத்தகைய ஆயுதப் போராட்டத்தை ஐ.நா. மன்றம் பிரகடனம் செய்த மனித உரிமைகள் சாசனமே ஆதரிக்கின்றது.

2009-ம் ஆண்டு மே மாதம் ஈழத்தில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின்போது, இரண்டு நாட்களில் ஒன்றரை லட்சம் பேர்களைக் கொன்று குவித்தது சிங்கள ராணுவம்.

எந்த ஒரு பன்னாட்டு விசாரணைக் குழுவையும் இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று மகிந்த ராஜபக்சே ஆணவத்தோடும், திமிரோடும் சொன்னான். வரலாற்றுக் காலந்தொட்டு அங்கே தமிழர்கள் தனி அரசு அமைத்து ஆண்டு வந்தார்கள். அது அவர்களது தனி நாடு, தமிழ் மக்களுக்கான அரசு.

தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம். தங்கள் தேசிய இனத்தின் இறையாண்மையைக் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை அவர்களுக்கும் உண்டு. அதற்காகத்தான் பிரபாகரன் படை நடத்தினார். விடுதலைப் புலிகள் போராடினார்கள். சிங்களர்களுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கு இல்லை. தனி இறையாண்மை கொண்ட தமிழ் ஈழம். அதுதான் எங்கள் குறிக்கோள்.

2009-ம் ஆண்டு ஈழத்தில் நடந்த படுகொலைகளைப் பற்றி விசாரிப்பதற்காக, 2014-ம் ஆண்டு ஐ.நா. மன்றம் மற்றொரு விசாரணைக் குழுவை நியமித்தது. இந்தக் குழுவையும் அவர்கள் இலங்கைக்கு உள்ளேயே அனுமதிக்கவில்லை. இருந்தபோதிலும், பாலச்சந்திரன் படுகொலை, இசைப்பிரியா பாலியல் வன்கொடுமைக்கொலை, எட்டுத் தமிழ் இளைஞர்கள் அம்மணமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமைபோன்ற அசைக்க முடியாத ஆவணங்களின் அடிப்படையில் இந்தக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது.

ஐ.நா. பாதுகாப்பு சபை, இலங்கையில் நடந்த தமிழ் இனப் படுகொலைகள் குறித்து பன்னாட்டு நீதிமன்றம் விசாரணை நடத்தப் பரிந்துரைக்க வேண்டும் என விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது. 2015 செப்டம்பர் 16-ந்தேதி தமிழக சட்டமன்றமும், அதே அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது. 1976-ம் ஆண்டு தந்தை செல்வா அவர்கள் வட்டுக்கோட்டையில் நிறைவேற்றிய தீர்மானத்தில் தனித் தமிழ் ஈழமே தீர்வு என அறுதியிட்டுக் கூறி இருக்கின்றார்.

7 கோரிக்கைகள்

இந்தக் கருத்தரங்கத்தின் வாயிலாக, கீழ்காணும் கோரிக்கைகளை நாம் வலியுறுத்துகின்றோம்.

* தமிழ் ஈழத் தாயகத்தில் இருந்து சிங்கள ராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும்.

* ஈழத் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள், சித்திரவதைகள் நிறுத்தப்பட வேண்டும்.

* உள்நாட்டுக்குள் இடம் பெயர்ந்த தமிழர்கள், அவர்களது சொந்த வாழ்விடங்களில் மீளக்குடி அமர்த்தப்படவேண்டும்.

* இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்படுகின்ற தமிழர்களை விடுவிக்க வேண்டும்.

* செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் தமிழ் ஈழப்பகுதிக்குள் தங்கு தடையின்றிச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

* தமிழ் ஈழத்தில் சிங்களர்களைக் கொண்டுவந்து குடியேற்றும் முயற்சிகளை நிறுத்தவேண்டும். இதற்காக, அறவழியிலான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ் ஈழம் அமைவதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கின்ற ஈழத்தமிழர்கள் அனைவரும் அந்தப் பொது வாக்கெடுப்பில் பங்குபெற வழிவகை செய்யவேண்டும் என்பதை நாம் வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ம.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்ட தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Response