தமிழினத்தின் சிறப்பை வெளிப்படுத்த கலையியல் கல்வி – தமிழ்நாடு அரசு முடிவு

ஓவியம், சிற்பம், நாடகம், நாட்டியம், இசை, திரைப்படம் உள்ளிட்ட கலைகளுக்கிடையேயான உறவை மேம்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறைக் கலைஞர்களுக்கு உந்துதல் அளிக்கவும் அழகியல் தொடர்பான புதிய,மேம்படுத்தப்பட்ட கல்வித்திட்டங்களை அறிமுகப்படுத்தவும் காண்பியல் முறையிலான தொடர்புகளை முன்னெடுக்கவும் ஓர் அமைப்பை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இதைச் செயல்படுத்தும் கருத்துருவை உருவாக்க ஒரு குழுவையும் அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு.

அக்குழுவினர் கலந்து விவாதித்து ஆலோசித்து அரசாங்கத்துக்குப் பரிந்துரைகளை வழங்குவார்கள். அதற்காக அமைக்கப்பட்டுள்ள அந்தக் குழுவின் பெயர் கவின் கலையியல் கல்விக் கொள்கைக் குழு.

இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக புகழ்பெற்ற ஓவியர் மருது நியமிக்கப்பட்டுள்ளார்.

அதில் உறுப்பினர்களாக,நடிகர் நாசர்,ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன், குரலிசைக் கலைஞர் சஞ்சய்சுப்பிரமணியன்,நவீனதொழில்நுட்ப ஆலோசகர் சிவராமன் ராமலிங்கம், ஓவியர் ஆதிமூலத்தின் மகன் அபராஜிதன்,இதழாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் மற்றும் தமிழ்ச்சான்றோர் நா,அருணாசலம் பேத்தியும் சா.அ.செளரிராசன் மகளுமாகிய கட்டிடக்கலைஞர் செல்வி தேன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல், பொருளாதாரம் ஆகியனவற்றைத் தாண்டி தமிழ் இனத்தின் சிறப்புகளை உலகறியச் செய்ய மிக மிகத் தகுதியான ஒருங்கிணைப்பாளரையும் துறைசார் வல்லுநர்களை உறுப்பினர்களாகவும் நியமித்து ஒரு குழு அமைத்திருப்பது நல்ல திட்டம் என விசயமறிந்தோர் பாராட்டுகிறார்கள்.

Leave a Response