
ராஜபக்சே ஆட்சியில் இருந்தபோது செய்த பல அட்டூழியங்களை தற்போதைய அரசு வெளிப்படுத்திவருகிறது. ராஜபக்சே, கொழும்பில் அதிபர் மாளிகையில் ரகசியமாக ஒரு பதுங்கு குழி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த பதுங்கு குழியும் கூட ஒரு சொகுசு மாளிகையாகத்தான் இருந்ததும் சமீபத்தில் அம்பலமானது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விமானதாக்குதல்களுக்கு அஞ்சி கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் சொகுசு பதுங்கு குழி அமைத்ததாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.
இது குறித்து நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது விளக்கம் அளித்துள்ள மகிந்த ராஜபக்சே, இலங்கை ராணுவ தாக்குதல்களில் இருந்து தப்பிக்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பதுங்கி குழி அமைத்திருந்தார்.
அதேபோல் விடுதலைப் புலிகள் விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தியதால்தான் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழி அமைக்கப்பட்டது. இந்த கட்டடம் ராணுவத்தினரை கொண்டே நிர்மானிக்கப்படுள்ளது.
பாதுகாப்பு நோக்கத்துக்காகவே நிலத்துக்குக் கீழ் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டதாகவும் இதில் ஒரு தவறுமே இல்லை என்று கூறியுள்ளார். இந்தக் கட்டிடத்தில் போடப்பட்டுள்ள தளபாடங்கள் யாவும் இத்தாலியிலிருந்து வரவழைக்கப்பட்டவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


