திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடங்கியது – 2 கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.

தமிழகத்தில் இரண்டு பெரும் கூட்டணிகளாக இருப்பது திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி. பிப்ரவரி 27 ஆம் தேதி அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலாயத்தில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், திமுக உடன் இரு கட்சிகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகைதீன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதைத்தொடர்ந்து, திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மமக தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தொகுதிகள் ஒதுக்கீட்டிற்குப் பின்னர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசியத் தலைவர் காதர் மொய்தீன் அளித்த பேட்டியில், ஐ.யூ.எம்.எல். குழுவினர் 6 பேர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சி 3 தொகுதிகளில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் என்றார்.

மமக தலைவர் ஜவாஹிருல்லா அளித்த பேட்டியில், திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் சதியை முறியடிக்க திமுக அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மனிதநேய மக்கள் கட்சி எந்தச் சின்னத்தில் போட்டியிடும் என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

Leave a Response