சிங்களர்களின் கொடிய சித்ரவதையாலேயே தமிழினி மரணம்- ஈழத்தமிழர்கள் குமுறல்

புலிகளின் மகளிர்பிரிவு தலைவர் தமிழினியின் மரணம் இயற்கையானது என ஒரு பொழுதும் நம்பாதீர்கள் என்ற கருத்துகள் பரவலாக வந்திருக்கின்றன.

அவர் மரணம் அடையவில்லை,சிங்கள ராணுவத்தால்  திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று சொல்வோரும் உண்டு.

அவர் மரணத்தைத் தொடர்ந்து வெளிவந்துள்ள கருத்துகளில் இதுவொன்று….

இது சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையின் அடையாளம். அவரின் மரணம் ஆராயப்பட வேண்டும். சர்வதேசம் இதை முன்னெடுக்குமா? உறவுகளே நாமேனும் இதை ஆராய மாட்டோமா?

சிறைகளுக்குள்ளும் விடுதலையின் பின்னும் எம் போராளிகள் இப்படி இளம் வயதில் கொல்லப்படுவது இது முதல் முறை அல்ல. சிறைக்குள் சொல்லொணா கொடிய சித்திரவதைகளை ஒரு பெண்ணாக பல முறை அனுபவித்தவர் தமிழினி அக்கா. அத்தனை கொடுமைகளின் சாட்சியான அவர் அதிக காலம் விடுதலையின் பின் உயிர் வாழக் கூடாது என்பதில் அரசுக்கு நிறைந்த அக்கறை உள்ளது.

குறிப்பாக கண்கட்டி விசாரணை என்ற பெயரில் உலகம் நடத்தும் நாடகங்களில் தமிழினி அக்கா போன்றோ ஆபத்தான சாட்சிகள் என இலங்கை கொலை வெறி அரசுக்கு தெரியும். எனவே தான் சொல்கின்றேன். தமிழினி அக்காவின் திடீர் நோய், திடீர் மரணம் ஆராயப்பட வேண்டும். மருத்துவப் பரிசோதனைக்கு அவர் உடல் உள்ளாக்கப்பட வேண்டும். அதே போல் சிறைகளில் வாழும் எம் பெண்களின் உரிமைகள் உலக மனித உரிமை அமைப்புக்கள் பொறுப்பேற்று கண்காணிக்கப்பட வேண்டும்.

சிறைக் கைதிகளாக சென்ற தமிழ் மக்கள் அனுபவித்த சித்திரவதைகள் மனிதப் படுகொலைகளை விட கொடியவை. அத்தகைய கொடிய படுகொலைச் சித்திரவதையால் பலியானவரே தமிழினி அக்கா. உண்மையை உரத்து சொல்வோம்.

உண்மையை காக்க போராடுவதே அவருக்கு செய்யும் அஞ்சலி ஆகும்.

 

Leave a Response