தடையை மீறி அதிமுக கொடியுடன் பயணம் – சசிகலா கைது செய்யப்படுவாரா?

பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சனவரி மாதம் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆனார். அந்தநேரம் கொரோனா பாதிப்பு காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிடம், சிறைத்துறை நிர்வாகம் சார்பில் நேரடியாக அதிகாரிகள் சென்று விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர்.

சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாகக் குணமடைந்தார். இதையடுத்து சனவரி மாதம் 31 ஆம் தேதி, அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். ஆனாலும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையின்படி, பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் சசிகலா தங்கி ஓய்வு எடுத்தார்.

இன்று காலையில் (பிப்ரவரி 8) பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா சென்னை புறப்பட்டார்.

அமைச்சர்களின் புகாரால் காவல்துறை தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு கார் மூலம் சென்னைக்கு புறப்பட்ட சசிகலா
தமிழக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளிக்கு வரும்போது வேறு காருக்கு மாறினார்.

ஆனாலும் அவருடைய காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்படவில்லை. இதுதொடர்பாக நோட்டிசை காவல்துறையினர் வழங்கினர். அதை சசிகலாவின் வழக்கறிஞர் பெற்றுக் கொண்டார். அதன்பின்னும் கொடி அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓசூர், கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, போரூர் வழியாக வரும் அவர் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு வருகிறார். அங்கு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அதனைத்தொடர்ந்து சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்துக்கு சசிகலா வருகிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வழிநெடுக திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். காரில் இருந்தபடியே கட்சியினரின் உற்சாக வரவேற்பை சசிகலா ஏற்றுக்கொள்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

காவல்துறையின் தடை அறிவிப்பை மீறி அவர் அதிமுக கொடியுடன் பயணிப்பதால் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response