அரசு விழாவில் அரசியலா? – மோடியிடம் நேருக்கு நேராகச் சீறிய மம்தா

சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 ஆவது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நேதாஜியின் நினைவாக நாணயம், தபால் தலை ஆகியனவற்றை அவர் வெளியிட்டார்.

இவ்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது….

125 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஒரு கதாநாயகன் பிறந்தார். அவரது பெயர் சுபாஷ்சந்திர போஸ். அவரது பெயரைக் கேட்டாலே மக்களுக்கு எழுச்சி ஏற்படுகிறது. அவரது வாழ்க்கை அனைவருக்கும் முன்னுதாரணமாக உள்ளது. உலகின் மிகப்பெரிய வல்லரசை எதிர்த்து அவர் போராடினார். சுதந்திரம் கொடுக்கப்படுவதல்ல, எடுக்கப்படுவது என்று கம்பீரமாக கர்ஜித்தார்.

வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று நேதாஜி விரும்பினார். அவர் காட்டிய வழியில் மத்திய அரசு நடக்கிறது. எல்லையில் இந்தியாவின் வீரத்தைப் பார்த்து உலகமே வியந்தது. நேதாஜியின் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.

கொரோனா வைரசுக்கு எதிராகப் போரிட்டு, உள்நாட்டிலேயே தடுப்பூசியை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். நேதாஜி இன்று உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவைப் பார்த்துப் பூரித்திருப்பார்.

வறுமை, படிப்பறிவின்மை, நோய் ஆகியவை இந்தியா எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகள் என்று நேதாஜி அப்போதே சுட்டிக் காட்டினார். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

இந்தியா சுதந்திரம் அடையும் என்று நேதாஜி கனவு கண்டார். அவரது கனவு, நனவானது. இதேபோல சுயசார்பு இந்தியா என்ற கனவையும், நனவாக்க வேண்டும். இந்தத் திட்டத்துக்கு மேற்குவங்கம் முன்னோடியாக வழிகாட்ட வேண்டும். மேற்குவங்கம், தங்க பூமியாக உருவெடுக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழாவில் மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர், முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட திரளானோர் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில், ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பப்பட்டதால் முதல்வர் மம்தா பானர்ஜி கோபம் அடைந்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பாக அவர் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

கோபத்தில் மேடையேறிய மம்தா, “இது அரசு விழா, ஒரு கட்சியின் விழா கிடையாது. இந்த விழாவில் குறைந்தபட்ச மரியாதையை கடைப்பிடிக்க வேண்டும். எனக்கு அழைப்பு விடுத்துவிட்டு, அவமரியாதையாக நடந்துகொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறிவிட்டு விழாவில் இருந்து வெளியேறினார்.

இதனால் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அதிகரிக்கிறது.

Leave a Response