
இலங்கை சிறைச்சாலைகளில் விடுதலை கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழர்களின் போராட்டம் மூன்றாவது நாளாகத் தொடருகிறது. இதனால் அவர்களுக்கு ஆதரவாக வெளியிலும் போராட்டங்கள் ஆரம்பித்திருக்கின்றன.
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் எட்டுப் பேரின் உடல் நிலை மோசமடைந்துள்ளதையடுத்து, அவர்கள் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோன்று அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்ற 40 பேரில் இருவரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, அவர்கள் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அங்கு சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிபிசி தமிழோசையிடம் கூறியிருக்கிறார்.
தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு கோட்டை தொடர்வண்டி நிலையத்திற்கு எதிரில் (அக்டோபர் 14)புதனன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது. இதற்கான அழைப்பை சம உரிமைகள் அமைப்பு விடுத்திருந்தது. இதில் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் சிறையிலிருக்கும் தமிழர்களின் உறவினர்கள் ஆகிய பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் பின்னர் எட்டுப்பேர் அடங்கிய குழு, அதிபரின் செயலகத்திற்குச் சென்று கைதிகள் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என கோரும் மனு ஒன்றை அங்கிருந்த அதிகாரிகளிடம் கொடுத்துள்ளது,
இந்தக் குழுவைச் சந்திக்க அதிபர் மைத்திரி விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.


