ஐந்து தலைமுறைகளாக மலையாளிகளிடம் அடிமைகளாக இருக்கும் தமிழர்கள், விடிவு எப்போது?

கேரளாவின் தெற்கத்திய மாவட்டமான இடுக்கிமாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம் மூணாறு. தேயிலை தயாரித்தலே இங்கு முக்கியமான தொழில் ஆகும். முத்தரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால் மூன்றாறு என்றிருந்து மூணாறாகியுள்ளது. சுற்றுலாத்தலத்தில் உலக மக்களைக் கவரும் தேயிலைத்தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் முகில்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சி. ஊட்டி, கொடைக்கானலுக்குப் பிறகு  இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ்பெற்ற கோடைத் தலம் மூன்னாறு.

மூனாறு தேயிலைத் தோட்டம், மாஞ்சோலை, வால்பாறை போன்ற கொத்தடிமை முறையைக் கொண்ட தேயிலைத் தோட்ட அமைப்பாகும். ஐந்து தலைமுறைகளாக தமிழர்கள், அடிமைகளாக மலையாளிகளிடம் வேலைபார்த்து வந்தபோதிலும் கொடூரமான முதலாளித்துவ சுரண்டல்களையே நம் மக்கள் நேரடியாக எதிர்கொண்டனர்.

மூணாறு இப்பொழுது இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத்தலமாகிவிட்டது. சாதாராண பொருட்களே, கடும் விலையேற்றத்தில் உள்ளது. உள்ளூர்வாசிகளான தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுக்கு அன்றாட வாழ்க்கையே விலைவாசி உயர்வினால் பெரும்போராட்டமாகிவிட்டது.

சமீபத்தில், போனஸ் கேட்டுப் போராட்டி பெண்கள் ஒன்று திரண்டு, தொழிற்சங்கங்கள் பங்குபெறாதபொழுதிலும் போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றிபெற்றனர். நேற்று மீண்டும் ஆறு பெண்கள் அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் பெரும்போராட்டத்தையும் உண்ணாவிரதத்தையும் தொடங்கியுள்ளனர். இன்று அதில் பங்குபெற்றோம். தினநாள் கூலி ரூ. 232 -லிருந்து ரூ. 500 ஆக உயர்த்தக்கோரி இன்று காலை ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபெற்று உணர்ச்சிகரமாக முழக்கங்களை எழுப்பினர். மழையிலும் கடும்குளிரிலும் போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் பங்குபெற்றிருப்போரை வாழ்த்தியிருக்கிறார் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மா.

மூணாறின் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் தொன்னூறு சதவிகிதம் தமிழர்கள். எழுபது சதவிதம் தமிழ் தலித்மக்கள். தமிழர்கள் அனைவரும் இப்போராட்டத்தில் பங்குபெறுங்கள். மூனாறு தொழிலாளர்கள் வெற்றிபெற, மூணாறுக்குப் பயணம் செய்யுங்கள்.

Leave a Response