சர்வதேச விசாரணை கோருவது ஏன்? சிங்களமக்கள் முன்னிலையில் தமிழ் அமைச்சர் விளக்கம்

 

கிழக்கு மாகாண விவசாய அமைச்சு ‘கிழக்கின் எழுச்சி’என்ற பெயரில் மாபெரும் விவசாயக் கண்காட்சியை வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் மூன்று நாட்கள் ஏற்பாடு செய்திருந்தது. கண்காட்சியின் இறுதி நாளான நேற்று சனிக்கிழமை (19.09.2015) இடம்பெற்ற நிறைவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாணம் மூவின மக்களும் வாழுகின்ற ஒரு மாகாணம். தமிழ்மக்கள் மீது இலங்கை அரசாங்கம் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு, போர்க்குற்றங்களுக்குச் சர்வதேச விசாரணை தேவை என்று தீர்மானம் நிறைவேற்றிய வடக்கு மாகாணசபையின் அமைச்சர் என்றவகையில் இங்குள்ள சிங்களச் சகோதரர்கள் என்னைக் குரோத உணர்வுடன் இனவாதியாகப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மாகாணசபையினூடாக நாம் வழங்கும் சேவைகளில் தமிழர், சிங்களவர், இஸ்லாமியர் என்று இனரீதியாக எந்தப் பாரபட்சமும் காட்டுவது இல்லை. மூவின மக்களும் இந்தத் தீவில் நிம்மதியாகவும் அதேசமயம் அடுத்தவர்  இறைமையில் மற்றவர் தலையீடு இல்லாமல் சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்றுதான் நாம் விரும்புகிறோம்.

இரண்டு பெரும் சிங்களத் தேசியக் கட்சிகளும் இன்று ஒன்றாக இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்திருக்கின்றன. இரண்டு கட்சியினரும் ஆட்சியில் இருந்த காலங்களில் எம்மீது போர் தொடுத்திருக்கின்றனர், ஏராளமானவர்களைக் கொன்றொழித்திருக்கின்றனர். இப்போது தாங்களும் தங்களுடைய படைகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் தங்களுக்கிடையே இருக்கக்கூடிய பிரச்சினைகளையெல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு ஒன்றுபட்டிருக்கின்றனர். குற்றம் இழைத்த இவர்களே நீதிபதிகளாக இருந்தால் எமக்கு நீதி கிடைக்காது என்பதாலேயே நாம் சர்வதேச விசாரணையைக் கோரி நிற்கிறோம். தமிழ்மக்களின் பெருவிருப்பத்தை, அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட நாங்கள் பிரதிபலித்திருக்கிறோம். எங்களுடைய முதல்வர் முன்மொழிந்திருக்கிறார்.

பழிவாங்கும் உணர்ச்சியோடு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்று நாம் சர்வதேச விசாரணையைக் கோரவில்லை. இனிமேலும் ஆட்சிப்பீடமேறும் அரசாங்கங்களால் தமிழ்மக்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படாமல் இருக்க இப்படியானதொரு சர்வதேச விசாரணை எங்களுக்குத் தேவையாக இருக்கிறது. எனவே, கிழக்கில் வாழும் சிங்களச் சகோதரர்கள் எங்கள் கோரிக்கையின் நியாயத்தைப் புhpந்துகொள்ள வேண்டும்.

வடக்கு – கிழக்கு நிர்வாகரீதியாகப் பிhpக்கப்பட்டிருந்தாலும் நாம் உணர்வால் ஒன்றுபட்டவர்கள் என்ற அடிப்படையிலேயே கிழக்கின் விவசாய அமைச்சர் என்னை கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார் என்று கருதுகிறேன். அந்த அடிப்படையிலேயே மிகுந்த மகிழ்ச்சியுடன் நானும் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கிறேன். இந்த உறவுப்பாலம், வடக்கில் எனது அமைச்சால் வருங்காலத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் கிழக்கை எவ்வாறு இணைத்துக்கொள்ள முடியும் என்று யோசிக்க வைத்துள்ளது. வடக்குக்கும் கிழக்குக்கும் பொதுவான வேலைத்திட்டங்களால் நாம் ஒன்றிணைவோம். இணைந்த வடக்கு கிழக்கில் தன்னாட்சி அதிகாரம் கொண்டவர்களாக மீண்டும் நாம் நிமிர்வதற்கு ஒன்றுபட்டு உழைப்போம் என்றும் தொpவித்துள்ளார்.

Leave a Response