ஆகஸ்ட் மாதமும் ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக முதல்வர் மீது மக்கள் அதிருப்தி

ஆகஸ்ட் மாதமும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்ததால், தமிழகம் முழுவதும் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

”மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இனிமேல் இ-பாஸ் வாங்க தேவை இல்லை; பொதுமக்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம்” என்று மத்திய அரசு அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி இந்த முடிவை எடுத்திருப்பது பல தரப்பிலும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

“தொற்றுப் பரவல் அதிகமாக இருக்கும் இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் நீடிக்கலாம். மற்றபடி ஆங்காங்கு உள்ள நிலைமைக்கு தகுந்தவாறு மாநில அரசும் கலெக்டர்களும் முடிவுகள் எடுக்கலாம். தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்” என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியது. ஆனால், ”மத்திய அரசின் முடிவைப் பார்த்தபின் தமிழக அரசு முடிவு எடுக்கும்” என்று சொல்லி வந்த முதல்வர், மொத்த தமிழ்நாட்டையும் மேலும் ஒரு மாதம் முடக்கி வைப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

”மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது” என்று பழனிச்சாமி பல முறை பெருமையுடன் குறிப்பிட்டார். ”இதற்கு மேலும் கொரோனாவை விரட்டி அடிப்பது இனிமேல் மக்கள் கையில்தான் இருக்கிறது” என்றும் சொன்னார். இதனால், ஊரடங்கு வாபஸ் பெறப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி நடக்கவில்லை.

கொரோனா தொற்று மிகப் பெரிய ஆபத்து என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், ஊரடங்குதான் அதற்குத் தீர்வு என்பது போல அரசாங்கம் நடந்து கொள்வதை யாரும் நம்பவில்லை. ஊரடங்குதான் தீர்வு என்றால், இந்த நாலரை மாதத்தில் கொரோனா முழுவதுமாக ஒழிந்திருக்க வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை. ஆகவே, ஊரடங்கு மட்டும் இதற்கு தீர்வு அல்ல என்பது ஊர்ஜிதம் ஆகிறது.

ஊரடங்கு விதிகளை மக்கள் முழுமையாகப் பின்பற்றவில்லை. உதாரணமாக, முகக் கவசம் அணிவதிலும், சமூக இடைவெளி கடைபிடிப்பதிலும் மக்கள் அலட்சியமாக நடக்கின்றனர் என்று அரசு சொல்கிறது. இது முழு உண்மை அல்ல. பெரும்பாலான மக்கள் இந்த விதிகளை முழுமையாகப் பின்பற்றுகின்றனர். ஒரு சிலர் மட்டும்தான் விதிகளை அப்பட்டமாக மீறி நடக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் தயங்குகிறது. ஸ்டேஷனுக்கு கூட்டிச் சென்றால் அல்லது சிறையில் அடைத்தால் நமக்கும் தொற்று வந்து விடும் என்ற பயம் அவர்களைத் தடுக்கிறது. இந்த பிரச்னைக்கு சுலபமான மாற்று ஏற்பாடுகளை கண்டறிந்து செயல்படுத்த அரசுக்கு அக்கறை இல்லை. விதிகளைப் பின்பற்றாமல் அப்பாவி மக்களுக்குத் தொற்று ஏற்படுத்துபவர்கள் சமூக விரோதிகள் என்று கேரள அரசு அறிவித்து ஜெயில் தண்டனை அளிக்க அவசரச் சட்டம் போட்டுள்ளது. அந்த சமூக அக்கறையும் துணிச்சலும் நமது அரசுக்கு ஏன் வரவில்லை என்பது வியப்புக்குரிய விஷயம்.

நோய் வராமலே மரணம் வந்து விடுமோ என்று பீதி அடையும் அளவுக்கு ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன. வேலைகள் பறி போகின்றன. ஊதியம் குறைக்கப்படுகிறது. அனைத்தையும் தாங்கிக் கொண்டு வேலைக்குப் போகலாம் என்று புறப்பட்டால் இ-பாஸ் கெடுபிடி தடுக்கிறது. அன்றாடம் உழைத்துச் சம்பாதிப்பவர்களின் நிலைமை இன்னும் பரிதாபமாக இருக்கிறது. பணக்காரர்கள், அரசு சம்பளம் வாங்குபவர்கள் தவிர மற்ற பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் வாழும் உரிமையே கேள்விக்குறியாகி நிற்கிறது.

அரசாங்க சம்பளம் வாங்குபவர்கள், பென்ஷன் வாங்குபவர்கள் நிலைமை இப்போதைக்கு மோசமில்லை என்றாலும், இது எத்தனை காலம் நீடிக்கும் என சொல்ல முடியாது. அரசுக்கு வருமானம் வருகிற வழிகளும் அடைபட்டுக் கிடக்கின்றன. அட்சய பாத்திரம் போல அள்ளிக் கொடுக்கும் சென்னை டாஸ்மாக் கடைகள் மூடிக் கிடக்கின்றன. வரிகள் மூலமாக அரசுக்குக் கிடைக்கும் வருமானம் அடியோடு சரிந்து விட்டது. ஏப்ரல் மாத வருமானம் வெறும் 2,000 கோடி என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சென்ற ஆண்டு ஏப்ரலில் இது 7,000 கோடியாக இருந்தது. ஜி எஸ் டி வருமானத்தில் மத்திய அரசு கொடுத்து வந்த பங்கு கொரோனாவால் நிலுவையில் இருக்கிறது. அதில் ஒரு பகுதியைக் கொடுத்த மத்திய அரசு, மீதியைக் கொடுக்க முடியுமா என்பதை இப்போது சொல்ல இயலாது என்று உதட்டைப் பிதுக்குகிறது. கொரோனா போருக்காகவே அவசரமாக நியமிக்கப்பட்ட பல பிரிவு ஊழியர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வழங்கவே அரசிடம் பணம் இல்லை என்கிறார்கள்.

போயஸ் கார்டன் வீட்டுக்கு 70 கோடியும், ஜெய்லலிதா சமாதியை அழகுபடுத்த கூடுதலாக 7 கோடியும் அள்ளிக் கொடுப்பதைப் பார்க்கும்போது, அரசிடம் பணம் குவிந்து கிடப்பதாகத் தோன்றலாம். ஆனால், உண்மை அது அல்ல. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட சிக்கல் வரும்போது எதார்த்த நிலை என்ன என்பது அம்பலத்துக்கு வரும்.

வாகனங்களே ஓடா விட்டால் விபத்து நடக்காது. மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தால் திருட்டு நடக்காது. நிரந்தரமாக அப்படிச் செய்ய முடியுமா? வாழ்க்கை என்பதே இயக்கம். அது நின்று விட்டால் எல்லாம் முடிந்தது. தடைகளை இரத்து செய்து விட்டு, விதிகளை தயவு தாட்சண்யம் பாராமல் கடுமையாக அமல்படுத்த வேண்டியதுதான் அரசு செய்ய வேண்டிய வேலை

உயிர்ப் பாதுகாப்பு தவிர வேறு எந்தத் தேவைகளும் இல்லாத ஒரு சிறு பிரிவின் ஆலோசனையைக் கேட்டு முடிவுகள் எடுத்தால், அடுத்த ஆண்டு தேர்தலில் அதற்காக மிகப்பெரிய விலை கொடுக்க நேரும்.

– கதிர்வேல்

Leave a Response