மோடி வருகைக்கு எதிர்ப்பு – டிரெண்டில் திரும்பிப்போ மோடி

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரதமர் பங்கேற்கும் மத்திய அரசின் திட்டங்கள் தொடக்க விழா, பிரச்சார பொதுக்கூட்டம் ஆகியவை தனித்தனி மேடைகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கடைசி நேரத்தில், அரசு விழா மட்டும் இன்று மதியம் 2.15 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை இவ்விழாவில் பிரதமர் தொடங்கி வைக்கிறார். பாஜகவின் அரசியல் பிரச்சார கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

விழாவில் பங்கேற்பதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதியம் 1.45 மணிக்கு பிரதமர் கன்னியாகுமரிக்கு வருகிறார். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் அவர் ஏற்கெனவே காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த இராமாயண கண்காட்சி கூடத்தை பார்வையிடுகிறார்.

அதன் பின்னரே அரசு விழாவில் பங்கேற்கிறார். விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.

மோடியின் கன்னியாகுமரி வருகையை ஒட்டி டிவிட்டரில் #GoBackModi ஹேஷ்டேக் மீண்டும் வைரலாகி வருகிறது. மோடியின் வருகைக்கு எதிராக தமிழர்கள் இதில் தொடர்ந்து டிவிட் செய்து வருகிறார்கள். இதனால் இந்த டேக் பெரிய அளவில் டிரெண்டாகி இந்திய அளவில் முதலிடம் பிடித்து இருக்கிறது.

மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்புகள் கிளப்புவது இதோடு நான்காவது முறை ஆகும். மூன்று முறையும் இந்த #GoBackModi ஹேஷ்டேக் உலக அளவில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று காலையே இந்திய அளவில் #GoBackModi ஹேஷ்டேக் வைரலாகி உள்ளது.

போகப்போக உலக அளவில் டிரெண்டாகும் என்று சொல்கிறார்கள். இதனால் பாஜக மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

Leave a Response