உடுமலை கவுசல்யா மறுமணம் – தலைவர்கள் வாழ்த்து

தமிழகத்தையே உலுக்கிய உடுமலைப்பேட்டை சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டு தன் கணவர் சங்கரை இழந்த கவுசல்யா, சாதியின் கொடுமையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கணவர் சங்கரின் நினைவாக சங்கர் சமூக நீதி அறக்கட்டளையை நிறுவி பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார்.

இந்நிலையில் கவுசல்யா கோவை வெள்ளலூரைச் சேர்ந்த பறை இசைக் கலைஞரும், நிமிர்வு கலையக ஒருங்கிணப்பாளருமான சக்தியை சாதி மறுப்பு மறுமணம் செய்துகொண்டார்.

இவர்களின் திருமணம் கோவையில் உள்ள தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று எளிமையாக நடந்து முடிந்தது. பறை இசை முழங்க இருவரும் இல்லற உறுதிமொழி ஏற்பை எடுத்துக்கொண்டனர்.

இந்தத் திருமண நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் வன்னியரசு, எவிடென்ஸ் கதிர், உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்தினார்கள்.

திருமணத்துக்குப் பிறகு கவுசல்யா- சக்தி இருவரும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

திருமண நிகழ்வின் போது பேசிய கவுசல்யா, ”சாதி ஒழிப்புக் களத்தில் நானும் சக்தியும் தொடர்ந்து இயங்குவோம். ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வரத் தொடர்ந்து போராடுவோம்என்றார்.

மறுமணம் புரிந்த கவுசல்யாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

Leave a Response