விராட் கோலி விஸ்வரூபம் இந்தியா அபார வெற்றி

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடந்தது.

‘டாஸ்’ வென்ற இந்திய அணித் தலைவர் கோலி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி கீரன் பவெலும், சந்தர்பால் ஹேம்ராஜூம் வெஸ்ட் இண்டீசின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் புகுந்தனர். பவுண்டரியுடன் இன்னிங்சை தொடங்கிய பவெல் அதிரடியாக ஆடினார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 323 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் அடியெடுத்து வைத்தனர். தவான் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஒஷானே தாமஸ் மணிக்கு 147 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பந்து அவரது பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பையும் தாக்கியது. இதன் பின்னர் விராட் கோலி இறங்கினார்.

எந்தவித சலனமும் இல்லாத இந்த ஆடுகளத்தில் விராட் கோலி வெளுத்து வாங்கினார். பவுண்டரிகளாக விரட்டியடித்த விராட் கோலி மளமளவென ரன்களை குவித்தார். ரோகித் சர்மாவும், வெஸ்ட்இண்டீசின் பவுலர்களை தண்டிக்க தவறவில்லை. தேவேந்திர பிஷூவின் பந்து வீச்சில் அவர் 2 சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். பனிப்பொழிவின் தாக்கத்தால் பந்தை சரியாக பிடித்து வீச முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் சிரமப்பட்டனர். இது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மேலும் சாதகமாக போனது.

வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய விராட் கோலி பவுண்டரி அடித்து தனது 36-வது சதத்தை பூர்த்தி செய்தார். சிறிது நேரத்தில் ரோகித் சர்மா தனது 20-வது சதத்தை எட்டினார். அபாரமாக ஆடிய விராட் கோலி 140 ரன்களில்(107 பந்து, 21 பவுண்டரி, 2 சிக்சர்) பிஷூவின் சுழற்பந்து வீச்சில் ஸ்டம்பிங் ஆனார். கோலி-ரோகித் கூட்டணி 2-வது விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்தது. அடுத்து அம்பத்தி ராயுடு வந்தார்.

மறுமுனையில் ருத்ரதாண்டவமாடிய ரோகித் சர்மா தொடர்ந்து ரன்மழை பொழிந்தார். அவரை கட்டுப்படுத்த வழிதெரியாமல் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. தாமசின் பந்து வீச்சில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி சாத்திய ரோகித் சர்மா, 43-வது ஓவரில் பந்தை சிக்சருக்கு தூக்கியடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.

இந்திய அணி 42.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 326 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 152 ரன்களுடனும் (117 பந்து, 15 பவுண்டரி, 8 சிக்சர்), அம்பத்தி ராயுடு 22 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Leave a Response