தமிழக உணர்வுகளுடன் விபரீத விளையாட்டு வேண்டாம் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்காததைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று மாலை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டன.

தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்டன.

சென்னையில் மட்டும் நான்கு இடங்களில் தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்தது.

சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் ஜெ.அன்பழகன் தலைமையில் அண்ணாசாலை முதல் தேனாம்பேட்டை வரையிலும்,

சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் சேகர்பாபு தலைமையில் பெரம்பூர் சர்ச் அருகிலிருந்து பிராட்வே வரையிலும்,

சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் மாதவரம் சுதர்சனம் தலைமையில் மூலக்கடை முதல் ஸ்டான்லி வரைக்கும்

சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் மா.சுப்ரமணியன் தலைமையில் சைதாப்பேட்டையிலிருந்து மீனம்பாக்கம் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள், கட்சிகளின் நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னை அண்ணா சாலையில் கனிமொழி தலைமையில் மனிதச் சங்கிலி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய கனிமொழி, கர்நாடகத் தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய அரசு தமிழர்களைப் பகடைக்காயாக மாற்றியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்துக்காக நாம் தொடர்ந்து போராட வேண்டும். இந்த அரசாங்கம் நமக்கு எதுவும் செய்யப்போவதில்லை.

இவர்கள் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள். நம்முடைய உரிமைக்கு நாம்தான் போராட வேண்டும். அதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும். மத்திய அரசாங்கம் நடுநிலை அரசாங்கமாக இல்லை. தமிழகத்தில் தமிழர்களுக்கு எதிரான ஆட்சிதான் நடந்து வருகிறது என்று கூறினார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திட்ட மாபெரும்
மனிதச் சங்கிலிப் போராட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

இதனை, மனிதச் சங்கிலி என்று கூறுவதை விட “ஏழரை கோடி மக்களின் உணர்வுச் சங்கிலி” என்று கூறும் அளவிற்குக் கட்சி வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து, காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திட வேண்டுமென்று குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இதன் பிறகாவது, மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் விபரீத விளையாட்டை நடத்தாமல், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response